

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள புதூர்பாண்டியாபுரம் சுங்கச்சாவடி பகுதியில் குடோனில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ஊரக ஏஎஸ்பி சந்தீசுக்கு தகவல் கிடைத்தது. அவரது தலைமையிலான போலீஸார் நேற்று மாலை அந்த குடோனுக்கு சென்று சோதனை நடத்தினர்.
அங்கு ஒரு டாரஸ் லாரியில் தார்ப்பாயால் மூடப்பட்ட நிலையில் சரக்கு ஏற்றப்பட்டிருந்தது. போலீஸார் தார்ப்பாயை திறந்து பார்த்தனர். அதில் சுமார் 5 அடி நீளம் கொண்ட செம்மரக்கட்டைகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. சுமார் 20 டன் கட்டைகள் இருந்தன. இதன் மதிப்பு சுமார் ரூ.10 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளை எஸ்பி ஜெயக்குமார் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். குடோனில் இருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.