

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரை அடுத்த திடீர் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி மணிமேகலை. இவர்களின் மகள் மகாலட்சுமி(10) கடந்த ஜன.6 அன்று உறவினர் வீட்டில் ரூ.70-ஐ திருடியதாகக் கூறி சிறுமியின் தாய் மணிமேகலை, உறவினர் மல்லிகா ஆகியோர், சிறுமியை அடித்து உதைத்து, உடலில் சூடுபோட்டு துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, உடல்நலக்குறைவு ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி நேற்று முன்தினம் அதிகாலை உயிரிழந்தார். இதுதொடர்பாக, சந்தேக மரணம் என அரும்பாவூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், குழந்தையின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அருள்செல்வி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு தலைவர் அய்யம்பெருமாள், உறுப்பினர்கள் சுரேஷ், விஜயந்தி, டாக்டர் பழனிவேல், அமுதா ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று திடீர் குப்பம் கிராமத்துக்குச் சென்று குழந்தையின் பெற்றோர், பாட்டி மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.