Published : 10 Jan 2022 10:53 AM
Last Updated : 10 Jan 2022 10:53 AM

உளுந்தூர்பேட்டை அருகே கொக்கு வேட்டையாடியவர்களை பிடித்த போலீஸ்: அபராதம் விதித்து விடுவித்த வனத்துறை

உளுந்தூர்பேட்டை அருகே துப்பாக்கியால் கொக்கு, நாரைகளை வேட்டையாடிய 3 பேரை எலவனாசூர்கோட்டை போலீஸார் பிடித்து, வனத்துறையிடம் ஒப்படைத்த நிலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

உளுந்தூர்பேட்டையை அடுத்த சவேரியார்புரம் கிராம ஏரிக் கரையில் கொக்கு, நாரை போன்ற பறவைகளை சிலர் வேட்டையாடுவதாக உளுந் தூர்பேட்டை டிஎஸ்பி மணிமொழியனுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீஸார் சம்பவ இடத் திற்கு சென்று பறவைகள் வேட்டையாடிய 3 பேரை துப்பாக்கியுடன் பிடித்தனர். அவர்களை எலவனாசூர்கோட்டை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் எறையூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்டீபன் (21), ஜெஸ்டின் (21), ரிஜாஸ் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை உளுந்தூர்பேட்டை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்திய வனத்துறை அலுவலர் காதர்பாஷா, அவர்களுக்கு அபராதம் விதித்து 3 பேரையும் விடுவித்தார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ‘‘அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கி பலூன் சுடுவதற்கும், குரங்களை விரட்டுவதற்குமான காற்றடைத்த துப்பாக்கி. எனவே அபராதம் விதித்து விடுவிக்கப்பட்டனர்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x