

அரசுத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலபேரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த நபரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த செவ்வாத்தூர் புதூர் கிராமத்தைச் சேர்ந்த காசி மகாராஜன் (62). இவரது மகள் தேன்மொழி(33). இவரிடம், சென்னையைச் சேர்ந்த ராஜேஷ் (29). என்பவர் அரசு வேலை வாங்கித்தருவதாக ஆசை வார்த்தை கூறி அதற்கு ரூ.10 லட்சம் வரை பணம் செலவாகும் எனக்கூறியுள்ளர்.
இதனை நம்பிய தேன்மொழி, ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்தை ராஜேஷிடம் கடந்த 2018-ம் ஆண்டு கொடுத்தாக கூறப்படுகிறது. பணத்தை பெற்ற ராஜேஷ் பல ஆண்டுகள் ஆகியும் அரசுத் துறையில் தேன்மொழிக்கு வேலையும் வாங்கி தரவில்லையாம்.
இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணனிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேன்மொழி புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த கந்திலி காவல் துறையினருக்கு எஸ்.பி., டாக்டர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
இதற்கிடையே, ராஜேஷ், தேன்மொழி மற்றும் கந்திலி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் சீனிவாசன் ஆகியோர் தங்களது செல்போன்களின் (கான்பிரன்ஸ் கால்) பேசியது, நேற்று முன்தினம் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், பணம் மோசடி செய்த சென்னையைச் சேர்ந்த ராஜேஷை கந்திலி காவல் துறை யினர் நேற்று முன்தினம் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராஜேஷ் சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினின் உதவியாளர் என தன்னை அறிமுகம் செய்து கொண்டு பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து கைது செய்யப் பட்ட ராஜேஷிடம் கந்திலி காவல் துறையினர் வீடியோ பதிவு ஒன்றை பதிவு செய்து அதையும் சமூக வலைதளங்களில் நேற்று பதிவு செய்தனர்.
அந்த பதிவில் ராஜேஷ் கூறியி ருப்பதாவது: என் பெயர் ராஜேஷ். நான் சென்னை பள்ளிக்கரணையில் உள்ளேன். திருப்பத்தூரைச் சேர்ந்த தேன்மொழிக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி அவரிடம் ரூ.4.50 லட்சம் வாங்கினேன். பணத்தை திருப்பி கொடுக்க முடியாததால், கந்திலி காவல் நிலையத்தில் தேன்மொழி புகார் அளித்தார். என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால், சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினின் உதவியாளர் என நான் என்னை அறிமுகம் செய்து ஏமாற்றினேன்.
கைது நடவடிக்கைக்கு பயந்து இது போல செய்தேன். எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினுக்கும் எனக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. நான் எந்த ஒரு கட்சி யிலும் உறுப்பினராக இல்லை’’ என வீடியோ பதிவில் குறிப் பிட்டுள்ளார்.