Published : 08 Jan 2022 10:39 AM
Last Updated : 08 Jan 2022 10:39 AM

வேலூர் அருகே லாரி ஓட்டுநர்கள் மீது மிளகாய் பொடி தூவி ரூ.2.75 லட்சம் பணம் பறித்த 3 இளைஞர்கள் கைது

சரண்ராஜ்

வேலூர்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சின்னநெற் குணம் பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் வடிவேலு (42). இவர், நெல் மூட்டைகளுடன் கர்நாடக மாநிலத்துக்கு லாரியில் நேற்று முன்தினம் புறப்பட்டார். இவருடன், மற்றொரு ஓட்டுநர் அன்பழகன் (40) என்பவர் உடன் சென்றார்.

கர்நாடகா மாநிலத்தில் நெல் மூட்டைகளை இறக்கி விட்டு, அதற்கான தொகையுடன் வேலூர் வழியாக விழுப்புரம் திரும்பினார். வேலூர் மாவட்டம் கொண வட்டம் அருகே நள்ளிரவில் லாரியை நிறுத்தி விட்டு வடிவேலு தனது செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த 3 பேர் திடீரென இரும்பு கம்பியால் வடிவேலுவை தாக்கினர். அவரின் சத்தம் கேட்டு லாரியில் உறங்கிக் கொண்டிருந்த அன்பழகன் திடுக்கிட்டு எழுந்தார்.

அப்போது மர்ம நபர்கள் இருவரையும் சரமாரியாக தாக்கி, 2 பேர் முகத்திலும் மிளகாய் பொடியை தூவி விட்டு, அவர்களிடம் இருந்து 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை பறித்துக் கொண்டு தப்பியோடினர்.

இது குறித்து வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் வடிவேலு நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந் நிலையில், தோட்டப்பாளையம் சந்திப்பு அருகே வடக்கு காவல் துறையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக காரில் வந்த 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர்கள்தான் லாரி ஓட்டுநர் வடிவேலு மீது மிளகாய் பொடி தூவி பணத்தை பறித்துச்சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் சத்து வாச்சாரியைச் சேர்ந்த தர் (37), காட்பாடியைச் சேர்ந்த சரண்ராஜ் (32), தோட்டப்பாளையத்தைச் சேர்ந்த விஷ்ணு (32) என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து 3 பேரையும் காவல் துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய், 3 இரும்பு கம்பிகள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x