

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகரத்தில் நடைபெற்ற இரட்டைக் கொலையில் தொடர்புடைய ரௌடிகளை போலீஸார் பிடிக்கும்போது நடத்திய என்கவுன்ட்டரில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் பின்னணி குறித்து காஞ்சிபுரம் டிஐஜி சத்தியபிரியா பேட்டி அளித்துள்ளார்.
செங்கல்பட்டு, சின்னநத்தம், கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் அப்பு கார்த்திக் (31). இவர் வழக்கு ஒன்றில் ஆஜராக செங்கல்பட்டு நகர காவல் நிலையத்துக்கு வந்தார். காவல் நிலையத்தில் கையெழுத்துவிட்டு அருகாமையில் உள்ள தேநீர்க் கடை ஒன்றில் தேநீர் அருந்தச் சென்றபோது பல்சர் வாகனத்தில் வந்த மூன்று பேர் இவர் மீது 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இதில் ஒரு நாட்டு வெடிகுண்டு அப்பு கார்த்திக் மீது பட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதன் பின்னர் நாட்டு வெடிகுண்டு வீசிய மூவரும் செங்கல்பட்டு, ரேடியோ நகர் மேட்டுத் தெரு பகுதிக்குச் சென்றனர். அங்கு அப்பு கார்த்திக்கின் உறவினர் மகேஷ் என்பவர் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அவரையும் இவர்கள் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். இந்தக் கொலைகளைச் செய்துவிட்டு இவர்கள் மூன்று பேரும் தப்பிச் சென்றனர்.
இது தொடர்பாக செங்கல்பட்டு நகர காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக 5 தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் விசாரித்து வந்தனர்.
இந்தக் கொலையில் திருப்புலிவனம் பகுதியைச் சேர்ந்த மாதவன் (27), செங்கல்பட்டு தினேஷ் (22), பி.வி.கொளத்தூர் பிஸ்கட் என்கிற முகமது மொய்தீன் (27) ஆகிய 3 பேருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இவர்களில் தினேஷ், மொய்தீன் ஆகியோரை செங்கல்பட்டு அருகே இருகுன்றப்பள்ளி என்ற இடத்தில் இருப்பது தெரியவந்து போலீஸார் கைது செய்ய முயன்றபோது ஏற்பட்ட மோதலில் இருவரையும் போலீஸார் சுட்டுக் கொன்றனர். மாதவன் திருப்புலிவனம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் சடலம் உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டது. இந்தச் சம்பவத்தில் போலீஸார் சுரேஷ்குமார், பரத்குமார் ஆகியோர் காயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து காயமடைந்த போலீஸாரை வடக்கு மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமார் சந்தித்து ஆறுதல் கூறினார். சுட்டுக் கொல்லப்பட்ட ரௌடிகளின் உடற்கூறு ஆய்வையும் பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து வடக்கு மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ''அப்பு கார்த்திக், மகேஷ் என்ற இருவரில் ஒருவரை நாட்டு வெடிகுண்டு வீசியும், மற்றொருவரைக் கத்தியால் குத்தியும் மாதவன், தினேஷ், பிஸ்கட் மொய்தீன் ஆகியோர் கொலை செய்தனர். இது தொடர்பாக இருகுன்றப்பள்ளி என்ற இடத்தில் போலீஸார் இவர்களைப் பிடிக்க முயன்றபோது இவர்கள் போலீஸார் மீது நாட்டு வெடிகுண்டு வீசியும், கத்தியால் வெட்டியும் தாக்க முயன்றனர். இதனைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் ரவிக்குமார் 4 ரவுண்டுகள் சுட்டதில் தினேஷ், பிஸ்கட் மொய்தீன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மாதவனிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறோம்'' என்றார்.
இந்தக் கொலைக்கான பின்னணி குறித்து காஞ்சிபுரம் டிஐஜி சத்தியபிரியா கூறுகையில் ”அப்பு கார்த்திக்கின் நண்பர் ஹரிகிருஷ்ணன் என்பவருக்கும், தினேஷின் தங்கை பவித்ராவுக்கும் காதல் இருந்தது. இதனை தினேஷ் எதிர்த்துள்ளார். அப்பு கார்த்திக், அவரது உறவினர் மகேஷ் இருவரும் ஹரிகிருஷ்ணனுக்கு ஆதரவாக இருந்துள்ளனர். இதனால் இவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக 2018-ல் ஒரு வழக்கு உள்ளது. இந்த முன்விரோதத்தில் இந்தக் கொலை நடந்துள்ளது” என்றார்.
செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் கூறுகையில், ''ரௌடிகளிடம் இருந்து 4 நாட்டு வெடிகுண்டுகளைக் கைப்பற்றியுள்ளோம். மாதவன் மற்றும் இந்தக் கொலையில் தொடர்புடைய ஜெசிகா என்பவரையும் கைது செய்து விசாரித்து வருகிறோம். ரௌடிகளை ஒடுக்க குண்டாஸ் சட்டங்களையும் பயன்படுத்தி வருகிறோம். நாட்டு வெடிகுண்டுகள் எங்கிருந்து கிடைக்கின்றன என்றும் விசாரித்து வருகிறோம்'' என்றார்.
கடந்த 2012-ம் ஆண்டு செங்கல்பட்டு நகர மன்ற முன்னாள் துணைத் தலைவர் ரவிபிரகாஷ் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையில் அப்பு கார்த்திக்குத் தொடர்பு உள்ளது. அவரது நினைவு நாள் ஜனவரி 6-ம் தேதி அனுசரிக்கப்பட்டது. இந்த நினைவு நாளில் அப்பு கார்த்திக்கும், அவரது உறவினர் மகேஷும் கொலை செய்யப்பட்டிருப்பது இதன் தொடர்ச்சியாக இருக்குமோ? என்ற சந்தேகமும் போலீஸாருக்கு ஏற்பட்டுள்ளது.