

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நேற்று (வியாழ்க்கிழமை) நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் அடுத்தடுத்து இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த இருவர் போலீஸ் என்கவுன்ட்டரில் பலியாகினர்.
முன்னதாக நேற்று மாலை செங்கல்பட்டு நகர காவல்நிலையம் எதிரில் உள்ள தேநீர் கடையில் டீ குடிக்க வந்த அப்பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற அப்பு கார்த்திக் அடையாளம் தெரியாத சிலரால் நாட்டு வெடிகுண்டு வீசியும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார். கார்த்தியின் தலை அடையாளம் தெரியாமல் சிதைக்கப்பட்டது.
அந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த அதிர்ச்சி விலகுவதற்குள் அதே கும்பல் செங்கல்பட்டு மேட்டுத்தெரு பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வரும் சீனுவாசன் என்பவரது மகன் மகேஷ் ( 22) என்பவரை அவரது வீட்டிலேயே வைத்து சரமாரியாக வெட்டிக் கொன்றது.
அடுத்தடுத்து நடந்த இரண்டு சம்பவங்கள் குறித்து காவல்துறையினர் 4 தனிப்படைகள் அமைத்து விசாரணையைத் தொடங்கினர்.
இந்நிலையில், மாமண்டூர் அருகே குற்றவாளிகள் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீஸ் அப்பகுதியை சுற்றி வளைத்தனர். அங்கிருந்த ரவுடிகள் போலீஸார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இதில் போலீஸார் தரப்பில் இருவருக்குக் காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து போலீஸார் தற்காப்புக்காக சுட்டதில் மொய்தீன், தினேஷ் ஆகிய இருவர் கொல்லப்பட்டதாக மாவட்ட எஸ்.பி. அரவிந்தன் தெரிவித்துள்ளார். தப்பிச் சென்றவர்களைப் பிடிக்க போலீஸார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று இரட்டைக் கொலை, இன்று போலீஸ் என்கவுன்ட்டர் என செங்கல்பட்டு நகரமே அதிர்ந்து போயுள்ளது.