Published : 07 Jan 2022 09:29 AM
Last Updated : 07 Jan 2022 09:29 AM

தூத்துக்குடியில் ரூ.6.5 கோடி மதிப்புள்ள அம்பர் கிரீஸ் பறிமுதல்

அம்பர் கிரீஸ்

தூத்துக்குடி: திமிங்கலம் உமிழக்கூடிய 'அம்பர் கிரீஸ்' என்ற மெழுகுப்பொருள் தென் மாவட்டங்களில் பிடிபடுவது கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது. திருச்செந்தூர் அருகே ரூ.6.5 கோடி மதிப்புள்ள அம்பர் கிரீஸ் நேற்று பிடிபட்டது.

நறுமணம் தயாரிக்க

20 வயதுக்கு மேற்பட்ட திமிங்கலங்கள் தங்கள் உடலில் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருளை வாய் வழியாக உமிழும். இதுவே, அம்பர் கிரீஸ். கடலில் மிதக்கும் தன்மை கொண்ட அம்பர் கிரீஸ், துபாய் உள்ளிட்ட நாடுகளில் உயர்தர நறுமணப் பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு கிலோ ரூ.1 கோடி. இந்தியாவில் வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அம்பர் கிரீஸ் விற்க தடை உள்ளது.

தென் மாவட்டங்களில் முதன்முதலாக கடந்த ஆண்டு ஜூனில் திருச்செந்தூரில் ரூ. 2 கோடி மதிப்பிலான அம்பர் கிரீஸ் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்குப் பிறகு தென் மாவட்டங்களில் அம்பர் கிரீஸ் அடிக்கடி பிடிபட்டு வருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் தூத்துக்குடியில் ரூ.23 கோடி மதிப்பிலான 23 கிலோ அம்பர் கிரீஸை, மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்தனர். திமுக பிரமுகர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தென்காசியில் ரூ.3.5 கோடி மதிப்பிலான அம்பர் கிரீஸ் பறிமுதல் செய்யப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்திலும் அம்பர் கிரீஸ் 2 முறை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் மோட்டார் சைக்கிளில் கடத்தி செல்லப்பட்ட ரூ.6.5 கோடி மதிப்புள்ள அம்பர் கிரீஸை நேற்று முன்தினம் போலீஸார் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் திருமலை நம்பி மகன் முருகேஷ் (27) என்பவரை குலசேகரன்பட்டினம் போலீஸார் கைது செய்தனர். அவர் மீது, வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ், வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

எங்கிருந்து வருகிறது?

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: திமிங்கலங்களை வேட்டையாடி அம்பர் கிரீஸை எடுக்க முடியாது. கடலில் மிதப்பதைத்தான் எடுத்து விற்கின்றனர். மன்னார் வளைகுடா பகுதியில் அம்பர் கிரீஸ் கிடைப்பது அரிதானது. தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரில் பறிமுதல் செய்யப்பட்ட அம்பர் கிரீஸ் குறித்து விசாரித்தோம். அவை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் இருந்து கடத்தி வரப்பட்டிருப்பது தெரியவந்தது.

கொழும்பு வழியாக வளைகுடா நாடுகளுக்கு கடத்துவதற்காகவே தூத்துக்குடிக்கு கொண்டுவரப்படுகிறது. இப்பகுதியில் பெரிய டீலர் ஒருவர் இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். அவரை பிடிக்க தொடர்ந்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x