

கோவை: கோவை கணபதி அருகே உள்ள நல்லாம்பாளையத்தை சேர்ந்தவர் ராமன் (55). இவர் ஆடீஸ் வீதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். கடந்த 2017 மார்ச் 25-ம் தேதி ராமன் பணியில் இருந்தபோது, க.க.சாவடியைச் சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளி சந்திரன் என்கிற சந்திரசேகரன் (43) மது அருந்த பணம் கேட்டுள்ளார். ராமன், பணத்தை அளிக்க மறுக்கவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த சந்திரசேகரன் காவலாளி ராமனை தாக்கி கீழே தள்ளி, அங்கு கிடந்த கல்லை எடுத்து அவரது தலையில் தாக்கியுள்ளார். இதில், ராமன் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக இருந்த சந்திரசேகரனை ஓராண்டுக்கு பிறகு கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி ஆர்.சக்திவேல் நேற்று தீர்ப்பளித்தார். அதில், காவலாளியை கொலை செய்த சந்திரசேகரனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்த நீதிபதி, இந்த தண்டனையை ஏக காலத்தில் அவர் அனுபவிக்க உத்தரவிட்டார்.