

திருப்பூர்: கோவை- சேலம் புறவழிச்சாலை அவிநாசி மங்கலம் சாலையில் தனியார் உணவகம் அருகே நேற்று மாலை செல்போனில் பேசியபடி, பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த3 சிறுவர்கள், செல்போனை பறித்துக் கொண்டு தப்ப முயன்றனர். அவர்களை பிடிக்க பொதுமக்கள் விரட்டிச்சென்றனர். சிறிது தூரம் இருசக்கர வாகனத்தில் சென்ற சிறுவர்கள், எதிரே வந்த கார் மீது மோதி காயமடைந்தனர். இதில், ஒரு சிறுவன் தப்பியோடினார். மற்ற இருவரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இருவரையும், அவிநாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீஸார் சேர்த்துள்ளனர். விசாரணையில், சிறுவர்கள் இருவரும் அவிநாசி அருகே நம்பியாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது மற்றும் 18 வயதுடையவர்கள் என தெரியவந்தது. அவிநாசி போலீஸார் வழக்கு பதிவு செய்து, அ.குரும்பபாளையத்தை சேர்ந்த 17 வயதுடைய மற்றொரு சிறுவனை தேடி வருகின்றனர்.