

திருப்போரூரை அடுத்த கேளம்பாக்கத்தில் பெண் ஒருவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை போலீஸார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரை அடுத்த கேளம்பாக்கம் பகுதியில் உள்ள காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் ஷாயின் ஷா(26). கணவர் இறந்ததால், அவரது தாயார் மும்தாஜ் மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பணிக்கு சென்றிருந்த தாயார் வீடு திரும்பியபோது, வீட்டில் தனியாக இருந்த அவரது மகள் ஷாயின் ஷா மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
தகவல் அறிந்த கேளம்பாக்கம் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஷாயின் ஷாவின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி, கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரிந்தது.
கேளம்பாக்கம் போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், கார்த்திக் (19), ஆனந்த் (20) ஆகியோரை கைது செய்தனர். மேலும், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.