

திருச்சி: மத்திய மண்டலத்தில் கடந்த 2020-ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2021-ம் ஆண்டில் கொலை வழக்குகள் குறைந்துள்ளன என மத்திய மண்டல ஐ.ஜி வே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி மத்திய மண்டலத்துக்குட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களிலும் கடந்த 2021-ம் ஆண்டு குடும்பப் பிரச்சினை காரணமாக 86 கொலை வழக்குகள், மதுபோதை தகராறு காரணமாக 70 கொலை வழக்குகள், நிலத் தகராறு உள்ளிட்ட பிற காரணங்களுக்காக 78 கொலை வழக்குகள் என மொத்தம் 254 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது 2020-ம் ஆண்டு மத்திய மண்டலத்தில் நிகழ்ந்த 272 கொலை வழக்குகளுடன் ஒப்பிடுகையில், 8 சதவீதம் குறைவாகும்.
நடப்பு 2022-ம் ஆண்டில் மத்திய மண்டலத்துக்குட்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகளின் நடவடிக்கைகளை முற்றிலுமாக ஒடுக்கவும், கொலைச் சம்பவங்களை தடுக்கவும், குறிப்பாக ரவுடிகள் சம்பந்தமான கொலை வழக்குகள் மத்திய மண்டலத்தில் நிகழாமல் தடுப்பதற்கும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கை சிறந்த முறையில் பேணிப் பாதுகாக்க, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து மாவட்ட எஸ்.பி.க்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.