திருவான்மியூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஊழியரை கட்டிப்போட்டு துப்பாக்கி முனையில் ரூ.1.32 லட்சம் கொள்ளை

துப்பாக்கி முனையில் கொள்ளை நடைபெற்ற சென்னை திருவான்மியூர் மெட்ரோ ரயில் நிலையத்தில்  ஆய்வு மேற்கொண்ட ரயில்வே பாதுகாப்புப் படை முதல்நிலை ஆணையர் செந்தில், எஸ்.பி. அதிவீரபாண்டியன், டிஎஸ்பி ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர். (அடுத்த படம்) மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்திய போலீஸார்.  படங்கள்: பு.க.பிரவீன்
துப்பாக்கி முனையில் கொள்ளை நடைபெற்ற சென்னை திருவான்மியூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ரயில்வே பாதுகாப்புப் படை முதல்நிலை ஆணையர் செந்தில், எஸ்.பி. அதிவீரபாண்டியன், டிஎஸ்பி ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர். (அடுத்த படம்) மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்திய போலீஸார். படங்கள்: பு.க.பிரவீன்
Updated on
2 min read

சென்னை: சென்னை திருவான்மியூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியரை கட்டிப்போட்டு, துப்பாக்கி முனையில் ரூ.1.32 லட்சம் கொள்ளையடித்தவர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்த ரயில் நிலையத்தில் நேற்று காலை 5 மணி வரை டிக்கெட் கவுன்டர் திறக்கவில்லை. அங்கிருந்த விளக்குகளும் அணைக்கப்பட்டிருந்தன. இதனால் சந்தேகமடைந்த பயணிகள், இதுகுறித்து ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து எழும்பூர் ரயில்வேபோலீஸார் அங்கு வந்தபோது, டிக்கெட் கவுன்டரின் பின்பக்க கதவும் வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் போலீஸார் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, இரவுப் பணியிலிருந்த, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பயணச் சீட்டு விற்பனையாளர் டீக்கா ராம் மீனா(28), அங்கிருந்தநாற்காலியில் கை, கால்கள் கட்டப்பட்டு, வாயில் துணி திணிக்கப்பட்ட நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.

அவரை மீட்ட போலீஸார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். நேற்று முன்தினம் மதியம் ஒரு மணி முதல் நேற்று காலை 7 மணி வரை டீக்கா ராம் மீனா பணியில் இருந்துள்ளார். நேற்று அதிகாலை டிக்கெட் கவுன்டரின் பின்புறம் வழியாகஉள்ளே நுழைந்த முகமூடிக் கொள்ளையர்கள் 3 பேர், அவரைத் தாக்கி, கை, கால்களை கட்டிப்போட்டு, 4 நாள் டிக்கெட் வசூல்பணம் ரூ.1.32 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. மேலும் அவர்கள் டீக்காராமை உள்ளே வைத்து, வெளிப்புறமாக பூட்டிச் சென்றுள்ளனர்.

டீக்கா ராம் மீனா
டீக்கா ராம் மீனா

கொள்ளை சம்பவம் நடைபெற்ற டிக்கெட் கவுன்டரில் சிசிடிவிகேமராக்கள் இல்லை. இதைத்தெரிந்துகொண்ட கொள்ளையர்கள், துப்பாக்கி முனையில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர் என்று போலீஸார் தெரிவித்தனர். மேலும், வெளிப்புறத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு, போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மேலும், டீக்கா ராம் மீனாவிடமும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் நிலைய டிக்கட் கவுன்டரில் தனியாக இருந்த அவர், பின்புறத்தில் அடுத்தடுத்து உள்ள 3 இரும்புக் கதவுகளை திறந்து வைத்தது ஏன் என்றும் அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

கொள்ளைச் சம்பவம் நடைபெற்ற இடத்தை ரயில்வே பாதுகாப்புப் படை முதல்நிலை ஆணையர் செந்தில், டிஐஜி ஜெயகவுரி, எஸ்.பி. அதிவீரபாண்டியன், டிஎஸ்பி காந்த் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும், கொள்ளைச் சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in