

சென்னை: சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகி வங்கிக் கணக்கிலிருந்து ‘சிம் ஸ்வாப்‘ முறையில் ரூ.24 லட்சம் மோசடி செய்ததாக 4 பேரை மேற்கு வங்க மாநிலத்தில் சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் புகார் மனு அளிக்கப்பட்டது.
அதில், எங்கள் மருத்துவமனை நிர்வாகியின் சென்னையில் உள்ளவங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருந்த செல்போன் சேவை துண்டிக்கப்பட்டு, யாரோ போலி இ-சிம்கார்டு மூலம் ரூ.24 லட்சத்தை ‘சிம் ஸ்வாப்’ முறையில் நூதனமுறையில் திருடியுள்ளனர்.
எனவே, மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு, பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.
இது தொடர்பாக சென்னை மத்தியக் குற்றப் பிரிவின் சைபர்க்ரைம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து, விசாரணை மேற்கொண்டனர்.
ஆய்வாளர் வினோத்குமார்தலைமையிலான தனிப்படை போலீஸாரின் விசாரணையில், உத்தரப் பிரதேசத்தில் அந்த சிம்கார்டு செயல்பட்டுக் கொண்டிருப்பதும், திருடப்பட்ட பணம் மேற்கு வங்கத்தில் உள்ள 16 வங்கிக் கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, தனிப்படைபோலீஸார் மேற்கு வங்கம் சென்று,அதே மாநிலத்தைச் சேர்ந்த சயந்தன் முகர்ஜி (25), ராகுல்ராவ்(24), ரோகன் அலிசனா (27),ராகேஷ் குமார் சிங் (33) ஆகியோரைக் கைது செய்ததாக மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 14 செல்போன்கள், 105 சிம்கார்டுகள், 154 டெபிட் கார்டுகள், 22 போலி பான்கார்டுகள், 128 ஆதார் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மோசடியின் முக்கியக் குற்றவாளியான மேலும் ஒருவரை் போலீஸார் தேடி வருகின்றனர். இதேபோல, சென்னையில் வேறுயாரிடமாவது மோசடி நடைபெற்றுள்ளதா என்றும் போலீஸார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.