

கோவையிலிருந்து ரூ.21 லட்சம் பணம், 22 பவுன் நகையுடன் காணாமல்போன 2 மாணவர்கள் திருச்சியில் மீட்கப்பட்டனர். அவர் கள் எடுத்து வந்த நகைகள், பணத்தை வழிப்பறி செய்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கோவை போத்தனூர் பகுதி யைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் தனது வீட்டிலிருந்த 22 பவுன் நகைகள், ரூ.21 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு அதே வகுப்பில் படிக்கும் மற்றொரு நண்பருடன் கடந்த 31-ம் தேதி வீட்டிலிருந்து வெளியேறி காணாமல் போனார். இதுகுறித்த புகாரின்பேரில், போத்தனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் திருச்சி பாலக் கரை பகுதியில் நேற்று சந்தேகப் படும் வகையில் சுற்றித் திரிந்த 2 சிறுவர்களைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். அப்போது, அவர்கள் கோவையில் நகை, பணத்துடன் காணாமல்போன மாணவர்கள் எனத் தெரியவந்தது.
அவர்கள் வீட்டிலிருந்து வெளி யேறி கோவை ரயில் நிலையம் வந்தபோது, அவர்களுக்கு திருச்சியைச் சேர்ந்த சூர்யா என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். அவருடன் புத்தாண்டு தினத்தன்று அதிகாலை ரயிலில் திருச்சிக்கு வந்தவர்களை, அந்த நபர் ரயில் நிலையத்திலிருந்து ஆட்டோவில் அழைத்துச் சென்று ஓரிடத்தில் வைத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து அடித்து, கத்தியைக் காட்டி மிரட்டி பணம் மற்றும் நகைகளை பறித்துச் சென்றுவிட்டதாக அந்த மாணவர்கள் தெரிவித்தனர்.
இதையறிந்த மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன் மாணவர்களிடமிருந்து பணம், நகைகளை பறித்துச் சென்றவர் களைப் பிடிக்க காந்தி மார்க்கெட் உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி தலைமையில் 2 தனிப்படைகளை அமைத்தார். தனிப்படையினர் நடத்திய விசாரணையில், சூர்யா என்ற பெயரில் மாணவர்களிடம் அறிமுகமான பாலக்கரையைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(19), அவரது நண்பர்களான வின்சென்ட் (20) மற்றும் 17 வயதுடைய 2 பேருடன் சேர்ந்து மாணவர்களை அடித்து துன்புறுத்தி நகைகள், பணத்தை பறித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேரையும் தனிப்படை போலீ ஸார் நேற்று கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.13.16 லட்சம் ரொக்கம், 9 பவுன் நகைகளை மீட்டனர். பின்னர், 2 மாணவர்களும் போத்தனூர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கோவா செல்ல திட்டம்
இதுகுறித்து போலீஸார் கூறும் போது, “மீட்கப்பட்ட மாணவர்களில் ஒருவரின் தந்தை மீன் வியாபாரி. அவரது மகன் வீட்டிலிருந்த பணம், நகையை எடுத்துக் கொண்டு தனது நண்பருடன் கோவாவுக்கு செல்லலாம் என கோவை ரயில் நிலையம் வந்துள்ளனர். அப்போது, அங்கு திருச்சி பாலக்கரையைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணனுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. மாணவர் களிடம் பணம், நகை இருப்பதை அறிந்த கோபாலகிருஷ்ணன், தனது பெயரை சூர்யா என மாற்றிக் கூறி, திருச்சிக்கு வந்தால் அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக தெரிவித்து, மாணவர்களை அழைத்து வந்துள்ளார்.
இங்கு அதிகாலை நேரத்தில் பெல்ஸ் கிரவுண்ட் பகுதிக்கு மாணவர்களை அழைத்துச் சென்று, தனது நண்பர்களுடன் சேர்ந்து பணம், நகையை பறித்துக் கொண்டு 2 மாணவர்களையும் விரட்டியடித்துள்ளார். தற்போது மீட்கப்பட்ட நகை பணத்தை தவிர, மீதமுள்ள பணம், நகைகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றனர்.