

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 4 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் ராதாபுரம் கிராமத்தில் வசிப்பவர் முகமது கான் மகன் ஹூசைன் கான்(33). இவரை திருட்டு வழக்கில், தண்டராம்பட்டு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத் துள்ளனர்.
இதேபோல், தண்டராம்பட்டு அடுத்த மலமஞ்சனூர் புதூர் கிராமத்தில் வசிக்கும் ராமு மகன் ரவி(49), பாலியல் வன்முறை வழக்கில், தண்டராம்பட்டு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும், வெம்பாக்கம் அடுத்த பிரம்மதேசம் கிராமம் ஜீவானந்தம் மகன் கோகுல்(22), ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த இசையனூர் கிராமம் பக்தவச்சலம் மகன் வசந்த குமார்(26) ஆகியோரை கஞ்சா கடத்திய வழக்கில் செய்யாறு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இவர்கள் 4 பேரும் சமூக விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் பரிந்துரையின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து ஹூசைன்கான், ரவி, கோகுல், வசந்தகுமார் ஆகிய 4 பேரையும், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தில் நேற்று முன்தினம் கைது செய்து, அதற்கான ஆணையை வேலூர் மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்தாண்டு 131 பேர் கைது
தி.மலை மாவட்டத்தில் திருட்டு மற்றும் வழிப்பறி, சாராயம் மற்றும் கஞ்சா விற்பனை, பாலியல் வன்முறை, மணல் கடத்தல், கொலை மற்றும் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களின் நடவடிக் கையை தடுக்கும் வகையில், குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, தி.மலை மாவட்டத்தில் சாராயம் விற்பனை செய்த 45 பேரும், மணல் கடத்தியதாக 6 பேர் உட்பட மொத்தம் 131 பேர், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடந்தாண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.