

ஈரோடு: அறச்சலூர் அருகே பாஜக தொண்டர் கொலைச் சம்பவம் தொடர்பாக, திமுகவைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலரைப் போலீஸார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் அறச்சலூர் தலவுமலையைச் சேர்ந்தவர் வடிவேல் (55). திமுகவில் இருந்த இவர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜகவில் இணைந்துள்ளார். இதனால் அப்பகுதியைச் சேர்ந்த திமுகவைச் சேர்ந்த வடுகப்பட்டி பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் ஈஸ்வரமூர்த்திக்கும், இவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், பாஜக எம்.எல்.ஏ. சி.சரஸ்வதியை தலவுமலை பகுதிக்கு அழைத்து வந்த வடிவேல், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகள் குறித்து தெரிவித்து, பார்வையிடச் செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஈஸ்வரமூர்த்தி, நேற்று முன்தினம் இரவு கோயிலில் இருந்த வடிவேலுவை, தாக்கியுள்ளார். இதில் வடிவேலு இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த அறச்சலூர் போலீஸார், ஈஸ்வரமூர்த்தியைக் கைது செய்தனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக குற்றம்சாட்டிய பாஜகவினர், எம்.எல்.ஏ. சி.சரஸ்வதி தலைமையில் ஈரோடு - காங்கேயம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.