Published : 30 Dec 2021 05:58 AM
Last Updated : 30 Dec 2021 05:58 AM

மீமிசல் அருகே தொழிலதிபர் வீட்டில் திருடுபோன 687 பவுன் நகைகளில் 559 பவுன் கிணற்றில் இருந்து மூட்டையாக மீட்பு: நீதிமன்றத்தில் இன்று ஒப்படைக்க முடிவு

மீமிசல் அருகே தொழிலதிபரின் வீட்டில் மாயமான 687 பவுன் நகைகளில் 559 பவுன் நகைகள் கிணற்றில் இருந்து நேற்று மீட்கப்பட்டன. இந்த நகைகள், நீதிமன்றத்தில் இன்று ஒப்படைக்கப்பட உள்ளன.

மேலும், நகைகளை திருடி கிணற்றில் போட்ட நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள கோபாலபட்டினத்தைச் சேர்ந்தவர் என்.ஜகுபர் சாதிக் (50). இவர், புரூணை நாட்டில் பல்வேறு இடங்களில் சொந்தமாக சூப்பர் மார்க்கெட் வைத்துள்ளார். குடும்பத்தினருடன் அங்கேயே தங்கியுள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு தொழில் செய்து வரும் ஜகுபர் சாதிக், 3 மாதங்களுக்கு ஒருமுறை சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம். கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இவர் ஊருக்கு வரவில்லை.

இந்நிலையில், இவரது வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு, அறையில் ஒரு பெட்டியில் இருந்த தங்க பிஸ்கட், தங்கக் காசு, தோடு, வளையல், நெத்தி சுட்டி, கழுத்து மாலை, தங்கக் கொலுசு, மோதிரம், திருகாணி, காது செயின், தோல் காப்பு வஸ்கி என மொத்தம் 687 பவுன் நகைகள் திருடு போனது இரு தினங்களுக்கு முன்பு தெரியவந்தது.

இதுகுறித்து அதே ஊரில் வசித்து வரும் ஜகுபர் சாதிக்கின் சகோதரி சாதிக்கா பீவி, மீமிசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, மர்ம நபர்கள் நகைகளை திருடியபின், வீட்டைச் சுற்றிலும் மிளகாய் பொடியை தூவிச் சென்றிருப்பது தெரியவந்தது. திருச்சி சரக காவல் துணைத் தலைவர் சரவண சுந்தர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் ஆகியோரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

3 தனிப்படை விசாரணை

இதைத் தொடர்ந்து, நகை திருடியவர் களை பிடிப்பதற்காக 2 ஆய்வாளர்கள் தலை மையில் 2 தனிப்படை, உதவி ஆய்வாளர் தலைமையில் ஒரு தனிப்படை என மொத்தம் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப் படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

கிணற்றில் கிடந்த மூட்டை

இந்நிலையில், ஜகுபர் சாதிக்கின் வீட்டு வளாகத்தில் கிடைத்த சில தடயங்களின் அடிப்படையில், வீட்டில் உள்ள கிணற்றில் இருந்த தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றினர். அப்போது, கிணற்றுக்கு அடியில் கிடந்த ஒரு பிளாஸ்டிக் சாக்கு மூட்டையை எடுத்துப் பார்த்தபோது, அதில் நகைகள் இருப்பது தெரியவந்தது. அதை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

அறந்தாங்கி காவல் துணை கண் காணிப்பாளர் தினேஷ்குமார் தலைமையிலான போலீஸார், நகை மதிப்பீட்டாளரை வரவழைத்து மூட்டையில் இருந்த நகைகளை அங்கேயே சரிபார்த்தனர். அதில், 559 பவுன் நகைகள் மட்டும் இருந்தது தெரியவந்தது. திருடுபோன நகைகளில் மீதம் உள்ள 128 பவுன் நகைகள் என்ன ஆனது என்பது குறித்தும், நகைகளை திருடி கிணற்றுக்குள் போட்டது யார் என்பது குறித்தும் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

கண்டுபிடித்தது எப்படி?

நகைகள் மீட்கப்பட்டது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:

கிணற்றின் மேல் பகுதியில் பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த இரும்பு வலையில், ஒரு பகுதி சற்று விலகி இருந்தது. இதனால், சந்தேகத்தின் அடிப்படையில் கிணற்றில் இருந்த தண்ணீர் முழுவதும் மோட்டார் வைத்து இறைத்து பார்க்கப்பட்டது.

அப்போது, நகை மூட்டை உள்ளே கிடந்தது தெரியவந்தது. மீட்கப்பட்ட 559 பவுன் நகைகள் தவிர, மீதம் உள்ள நகைகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். நகைகளை திருடியவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.

இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட 559 பவுன் நகைகளும் மீமிசல் காவல் நிலை யத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. மீட்கப் பட்ட நகைகளையும், அவற்றின் பெயர், எடையுடன் கூடிய பட்டியலையும் அறந்தாங்கி நீதிமன்றத்தில் இன்று (டிச.30) ஒப்படைக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x