Published : 27 Dec 2021 03:41 PM
Last Updated : 27 Dec 2021 03:41 PM

விருதுநகரில் ரயில் முன் பாய்ந்து சிறப்பு சார்பு ஆய்வாளர் தற்கொலை

விருதுநகர்: விருதுநகரில் ரயில் முன் பாய்ந்து சிறப்பு எஸ்.ஐ. ஒருவர் நேற்று முன்தினம் இரவு தற்கொலை செய்துகொண்டார்.

விருதுநகர்-சாத்தூர் ரயில் வழித்தடத்தில் மாவட்ட விளை யாட்டரங்கத்தின் பின்புறம் நேற்று முன்தினம் இரவு சென்னை நோக்கிச் சென்ற நெல்லை விரைவு ரயில் முன் ஒருவர் பாய்ந்து இறந்துகிடந்தார்.

இதுகுறித்து ரயில் இன்ஜின் ஓட்டுநர் கொடுத்த தகவலின் பேரில் தூத்துக்குடி ரயில்வே போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று உடலை மீட்டனர். விபத்து நடந்த இடம் அருகே பைக்கும் அதன் மேல் மொபைல் போன் ஒன்றும் இருந்தது.

விசாரணையில், தற்கொலை செய்து கொண்டவர் விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மார்டன் நகரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (48) என்பதும் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவில் சிறப்பு எஸ்.ஐ.யாகப் பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது.

குடிப்பழக்கம் உள்ள இவர் குடியை நிறுத்துவதற்காக கடந்த 4 மாதங்களாக சிகிச்சை பெற்றுவந்தார். நேற்று முன்தினம் காலை பணிக்குச் சென்றவர் இரவு வீடு திரும்பாமல் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இவரது மனைவி பானுமதி, சிவகாசி நகர் குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வருகிறார். இவர்களது மகன் மதுரையில் உள்ள ஒரு கல்லூரியிலும், மகள் பிளஸ் 2-வும் படித்து வருகின்றனர்.

ராதாகிருஷ்ணனின் தற்கொலைக்கான காரணம் குறித்து தூத்துக்குடி ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x