

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வேகுப்பட்டி பாண்டியன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கட் மகன் அரவிந்தராஜ்(27). இவர், நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த பொன்னமராவதி போலீஸார், அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரித்து வந்தனர்.
விசாரணையில், ஏற்கெனவே பாலியல் பிரச்சினைகளை ஏற்படுத்தும் விதமாக சமூக வலைதளத்தில் பகிர்ந்த சிறுமிகளின் படங்களால் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து விரக்தியில் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.
இது குறித்து போலீஸார் தரப்பில் கூறியது: அரவிந்தராஜ், சிறுமிகளுக்கு பாலியல் பிரச்சினையை ஏற்படுத்தும் விதமாக சமூக வலைதளத்தில் சில படங்களை கடந்த ஏப்ரல் மாதம் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து, சைபர் கிரைம் போலீஸார் மூலம் விசாரிக்கப்பட்டு வந்தது. பின்னர், அரவிந்தராஜ் மீது திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 21-ம் தேதி போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அப்போது, அரவிந்தராஜை போலீஸார் விசாரித்து அனுப்பினர்.
இந்த தகவலை சமூக வலைதளங்களில் யாரோ பதிவிட்டுள்ளனர். இதைப்பற்றி பலரும் அரவிந்தராஜிடம் விசாரித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிவித்தனர்.