

திருப்பூர்: சேவூர் அருகே அ.குரும்பபாளையத்தில் நில மோசடியில் ரூ.60 லட்சம்ஏமாற்றப்பட்டதாக ஆட்சியரிடம் புகார் அளித்த பெண், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக இருவரை சேவூர் போலீஸார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் சேவூர் அருகே உள்ள அ.குரும்பபாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (55). இவரது மனைவி ஷீலா தேவி (35). இவர்களது மகள் ஸ்ரீநிதி (9). இவர்கள் 3 பேரும், கடந்த 13-ம் தேதி திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். அம்மனுவில், ‘தங்களுக்கு சொந்தமான அ.குரும்பபாளையத்தில் 45 சென்ட் நிலத்துக்கான ஆவணத்தை அடமானமாக வைத்து, திருப்பூர் போயம்பாளையம் குருவாயூரப்பன் நகரை சேர்ந்த சிவராஜ் என்பவரிடம் பணம் பெற்றோம். நிலத்தை விற்பனை செய்த வகையில் ரூ.60 லட்சத்தை சிவராஜ் கொடுக்காமல் மோசடி செய்துவிட்டார். அதை மீட்டுத்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில் கடந்த 22-ம் தேதி விஷம் குடித்து ஷீலாதேவி தற்கொலை செய்துகொண்டார். முன்னதாக ஷீலா தேவி எழுதி வைத்திருந்த கடிதத்தில், ‘தனக்கு ரூ.60 லட்சம் கொடுக்காமல் ஏமாற்றிய சிவராஜ் (40), அவரது தம்பி கதிர்வேல் (35) ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,பணத்தை பெற்று தனது மகளிடம் ஒப்படைக்க வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார். கடிதத்தை மீட்ட சேவூர் போலீஸார், ஷீலாதேவியை தற்கொலைக்கு தூண்டியதாக சிவராஜ், கதிர்வேல், இவர்களது தந்தை நாச்சிமுத்து ஆகியோர் மீது வழக்கு பதிந்தனர். இதில் சிவராஜ், கதிர்வேலை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
ஷீலாதேவியின் கணவர் பொன்னுசாமி கூறும்போது, ‘‘எங்கள் குழந்தையின் எதிர்காலம் கருதி, எங்களுக்கு உரிய நீதி கிடைக்க மாவட்ட நிர்வாகமும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.