

திருப்பூர்: திருப்பூரில் ஃப்ரீ பயர் விளையாடிய 8-ம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் பகுதிக்கு உட்பட்ட தொரவலூர் அருகே ஆண்டிபாளையத்தைச் சேர்ந்த தம்பதி முனியான்(40), சுதா (35). விவசாய கூலித் தொழிலாளர்களான இவர்களது மூத்த மகன், ஈரோடு மாவட்டம் பண்ணாரியில் பாட்டி வீட்டில் தங்கியபடி ராஜு நகர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தார்.
கரோனா நோய் தொற்று பரவல் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் செயல்படாத நிலையில், 8-ம் வகுப்பு படிக்கும் மகனின் ஆன்லைன் வகுப்புக்காக தொடுதிரை வசதி கொண்ட செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளனர். தம்பதி வேலைக்கு செல்வதால், பள்ளி வகுப்பு நேரம் போக எஞ்சிய நேரங்களில் ஆன்லைன் விளையாட்டுகளில் சிறுவன் தொடர்ந்து ஆர்வம் காட்டியதாக தெரிகிறது. சமீபத்தில் பள்ளிகள் முழுமையாக செயல்படத் தொடங்கிய நிலையில், சிறுவன் பண்ணாரிக்கு செல்லாமல் ஆண்டிப்பாளையத்தில் பெற்றோருடன் இருந்து வந்தார்.
இந்நிலையில், சிறுவன் நேற்று முன்தினம் செல்போனில் ஃப்ரீபயர் விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தார். தொடர்ந்து விளையாடிய அவர் மனச்சோர்வு ஏற்பட்ட நிலையில், வீட்டின் மற்றொரு பகுதியில் உள்ள குடிசையில் தூக்கிட்டுக் கொண்டார்.
சமையல் செய்து கொண்டிருந்த சுதா, நீண்ட நேரமாக சிறுவனை காணாததால், அவரை தேடினார். அப்போது வீட்டுக்குள் சிறுவன் தூக்கிட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியைடைந்தார். அக்கம்பக்கத்தினருடன் சேர்ந்து சிறுவனை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். எனினும், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இதுதொடர்பாக பெருமாநல்லூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
இதுதொடர்பாக சிறுவனின் தந்தை ‘இந்து தமிழ் திசை' செய்தியாளரிடம் கூறும்போது, “மகனின் ஆன்லைன் வகுப்புக்காகத்தான், தொடுதிரை செல்போன் வாங்கிக்கொடுத்தேன். அந்த செல்போனை எனக்கு பயன்படுத்த தெரியாது. இன்றைக்கு எங்கள் குடும்பத்தின் நிம்மதியை அது சீரழித்துவிட்டது. நானும், மனைவியும் வேலைக்கு சென்றுவிடுவோம். ஆன்லைன் வகுப்புகள் நாள்தோறும் இருந்ததால், மகன் செல்போனில் விளையாடி எதிர்காலத்தை தொலைப்பான் என கனவிலும் நினைக்கவில்லை. ஆன்லைன் வகுப்புகளை விட்டுவிட்டு, நேரடி வகுப்புகளை நடத்தி இருக்கலாம்” என்றார்.
ஆற்றலை முடக்கும் செல்போன்
இதுதொடர்பாக மனநல மருத்துவர் சிவராஜ் கூறும்போது, “கரோனா ஊரடங்கில் இணைய விளையாட்டுக்கு அடிமையான பள்ளிக் குழந்தைகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இது சமூக நோயாக மாறியுள்ளது. குறிப்பாக, ஃப்ரீ பயர், பப்ஜி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு பள்ளிக் குழந்தைகள் அடிமையாவது தொடர்கிறது. ஒரு வீதியில் 10 பேர் ஒன்றுகூடி ஆன்லைன்விளையாட்டுகளில் பல மணிநேரம் ஈடுபட்டு தங்களை அடிமையாக்கிக் கொள்கின்றனர். இதற்கு ‘சீசனல் அபெக்டிவ் டிஸ்ஆர்டர் (Seasonal Affective Disorder) என்று பெயர்.
ஏதாவது ஒரு விஷயத்தில் தங்களின் கவனத்தை முழுமையாக செலுத்தவைத்து, மகத்தான மனித ஆற்றலை வீணடிக்கின்றன இந்த விளையாட்டுகள்.
குழந்தைகளை அருகே உள்ளபூங்காங்களுக்கு அழைத்துச் சென்று விளையாட வைப்பது, மிதிவண்டி ஓட்டுவது, நீச்சல்,புத்தகங்கள் படிக்க வைப்பது, யோகா என கவனத்தை திசை திருப்பலாம். மனித ஆற்றலை செல்போன்கள் முடக்குகின்றன. செல்போன்களை அளவோடு பயன்படுத்துவது நல்லது” என்றார்.