தூத்துக்குடியில் ரூ.21 கோடி போதைப் பொருள் பறிமுதல்: கடலில் மிதந்ததை எடுத்து விற்பனை செய்த 6 பேர் கைது

தூத்துக்குடியில் ரூ.21 கோடி போதைப் பொருள் பறிமுதல்: கடலில் மிதந்ததை எடுத்து விற்பனை செய்த 6 பேர் கைது
Updated on
1 min read

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ரூ.21 கோடி மதிப்பிலான 21 கிலோ ஹெராயின் போதைப் பொருளை போலீஸார் பறிமுதல் செய்தனர். கடலில் மிதந்ததை எடுத்து பதுக்கி வைத்து விற்பனை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் ஹெராயின் போதைப் பொருள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின்படி, ஏடிஎஸ்பி கார்த்திகேயன், டிஎஸ்பி (பொ) சம்பத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலை டூவிபுரம் பூங்கா பகுதியில் தனிப்படை போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்கு சந்தேக மான வகையில் நின்று கொண் டிருந்த அண்ணா நகரைச் சேர்ந்த அன்சார் அலி (26), யோகீஸ்வர் காலனியைச் சேர்ந்த மாரிமுத்து (26), டூவிபுரத்தைச் சேர்ந்த இம்ரான்கான் (27) ஆகிய 3 பேரையும் பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் ஹெராயின் போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது. மூவரையும் கைது செய்த போலீஸார், இம்ரான்கான் வீட்டில் இருந்து 162 கிராம் ஹெராயினை பறிமுதல் செய்தனர்.

இவர்கள் கொடுத்த தகவலின்படி, தருவைகுளம் ரோஸ் நகரைச் சேர்ந்த அந்தோணி முத்து (42) வீட்டில், 21 கிலோ ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அவருக்கு உதவியாக இருந்த பிரேம்சிங் (38), கசாலி (27) ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.

இதுபற்றி, செய்தியாளர்களிடம் எஸ்பி ஜெயக்குமார் கூறியதாவது: மொத்தம் 21 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.21 கோடியாகும். 6 பேரை கைது செய்துள்ளோம். முருகன் என்பவரை தேடி வருகிறோம். கைதான அந்தோணி முத்து, ஓராண்டுக்கு முன்பு மினிக்காய் தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, கடலில் மிதந்து வந்த பார்சலை எடுத்துள்ளார். அதில், தலா 1 கிலோ எடை கொண்ட 30 பாக்கெட்கள் இருந்துள்ளன. அதில் இருந்த பவுடர் போதைப் பொருள் என தெரிந்தாலும், அதன் மதிப்பு தெரியாததால் 1 கிலோ ரூ. 1.5 லட்சம் வீதம், கடந்த ஒன்றரை மாதத்தில் 7 கிலோ விற்பனை செய்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர் களுக்கு போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. போதைப் பொருள் கடத்தல் வழக்குகளும் அவர்கள் மீது இல்லை. இருப்பினும், போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு எஸ்.பி. கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in