Published : 22 Dec 2021 08:26 AM
Last Updated : 22 Dec 2021 08:26 AM

சென்னை - ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை: மருத்துவ விடுப்பு மறுக்கப்பட்டது காரணமா என விசாரணை

சென்னை: கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சாதிக் பாஷா(26), 2017-ல் இரண்டாம் நிலைக் காவலராக பணியில் சேர்ந்துள்ளார். கீழ்ப்பாக்கம் குட்டியப்பன் தெருவில் வாடகை வீட்டில் நண்பர்களுடன் தங்கியிருந்த அவர், ஆயுதப்படையில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சாதிக் பாஷா, நேற்று முன்தினமும் மருத்துவமனைக்கு செல்வதாக நண்பர்களிடம் தெரிவித்துள்ளார்.

இரவு நண்பர்கள் பணி முடிந்து வீட்டுக்கு வந்தபோது, கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. வெகுநேரமாக கதவைத் தட்டியும் சாதிக் பாஷா திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, மின் விசிறியில் தூக்கிட்ட நிலையில் சாதிக் பாஷா இறந்துகிடந்தது தெரியவந்தது. தலைமைச் செயலக காலனி போலீஸார், அவரது உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவரது அறையில் இருந்த ஒரு கடிதத்தில், தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மற்றொரு கடிதத்தில், உடல் நிலை சரியில்லாத காரணத்தால், மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற மருத்துவ விடுமுறை கடவுச்சீட்டு வழங்க வேண்டும் என்று உயரதிகாரிக்கு சாதிக் பாஷா வேண்டுகோள் விடுத்திருந்தது தெரியவந்தது.

மருத்துவ விடுப்பு வழங்காததால் விரக்தியடைந்த சாதிக் பாஷா, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

சாதிக் பாஷா மருத்துவ விடுப்பு கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x