

அரக்கோணம் அருகே நள்ளிரவில் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு 15 பவுன் தங்க நகைகள், ரூ.40 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்கரன் (23). இவரது வீடு அங்குள்ள விவசாய நிலத்தில் தனியாக உள்ளது. வீட்டில் தாய் சுதா (52), பெரியம்மா லதா (56), பாட்டி ரஞ்சிதம்மாள் (76) ஆகியோர் உள்ளனர். விவசாய நிலத்தில் தனியாக இருப்பதால் பாதுகாப்புக்காக விலை உயர்ந்த வகையைச் சேர்ந்த 2 நாய்களை வளர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டதும் புஷ்கரன் எழுந்துள்ளார். ஆனால், திடீரென நாய்கள் குரைப்பதை நிறுத்தியதால் மீண்டும் உறங்கச்செல்ல முயன்றபோது கதவை யாரோ வேகமாக தட்டும் சத்தம் கேட்டுள்ளது. கதவை திறந்தபோது, முகமூடி அணிந்த 3 பேர், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நிற்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தவர் கதவை வேகமாக மூடியதுடன் கூச்சலிட்டார்.
வீட்டில் இருந்த தாய், பாட்டி உள்ளிட்டோர் ஓடிவந்தனர். அப்போது முகமூடி கும்பலைச் சேர்ந்த ஒரு நபர் அருகில் இருந்த ஜன்னல் வழியாக சுமார் இரண்டரை அடி நீளம் கொண்ட நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில்,புஷ்கரனின் கழுத்து, காது உள்ளிட்ட பகுதிகளில்துப்பாக்கி ரவை பட்டு பலத்த காயம் ஏற்பட்டது. சுதா, ரஞ்சிதம்மாள் ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது. புஷ்கரன் கீழே விழுந்த நிலையில், பூட்டிய கதவை உடைத்துக்கொண்டு முகமூடி கும்பல் உள்ளே புகுந்தனர்.
துப்பாக்கி முனையில் அனைவரையும் மிரட்டிய கும்பல், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாறி, மாறி பேசி, சுதா, லதா மற்றும் ரஞ்சிதம்மாள் ஆகியோர் அணிந்திருந்த நகைகளை பறித்துள்ளனர். பீரோவிலிருந்த நகை மற்றும் பணத்தையும் எடுத்துக்கொண்டனர். செல்போனை எடுத்துக்கொண்ட மர்ம கும்பல் வீட்டில் ஆங்காங்கே மிளகாய் பொடிகளை தூவிவிட்டு தப்பினர்.
இதற்கிடையில், மயங்கிய நிலையில் இருந்த புஷ்கரன் விழித்ததும் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். போலீஸார் 4 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உள்ளூர் கொள்ளையர்களா?
ராணிப்பேட்டை எஸ்.பி. டாக்டர் தீபா சத்யன் மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொள்ளையர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேசியுள்ளதால் வடமாநில கொள்ளையர்கள் இல்லை என்றும் உள்ளூரைசேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
நாய்களுக்கு மயக்க ஸ்பிரே அடித்து குரைக்காமல் செய்துள்ளதும் தெரியவந்தது. கொள்ளை கும்பல் பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கியும் வடமாநில கொள்ளையர்கள் பயன்படுத்தும் வகையை சேர்ந்தது இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.