கோவையில் காணாமல்போன பள்ளி மாணவி கொலை: சாக்கு மூட்டையில் உடல் மீட்பு

கோவையில் காணாமல்போன பள்ளி மாணவி கொலை: சாக்கு மூட்டையில் உடல் மீட்பு
Updated on
1 min read

கோவை: கோவையில் காணாமல்போன மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சாக்கு மூட்டையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்த பெண், கணவரைப் பிரிந்த நிலையில், 17 மற்றும் 14 வயது மகள்கள் மற்றும் தாயாருடன் வசிக்கிறார். இளைய மகள் அரசுப் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 11-ம் தேதி வீட்டில் மற்ற மூவரும் கட்டிட வேலைக்குச் சென்றுவிட, மாணவி மட்டும் வீட்டில் இருந்தார். அன்றைய தினம் மாலை வேலை முடித்துவிட்டு அவர்கள் திரும்பி வந்தபோது, மாணவி வீட்டில் இல்லை. செல்போன் எண்ணுக்கு அழைத்தபோது, அணைத்து வைக்கப்பட்டிருந்தது. மாணவியின் பள்ளித் தோழிகளிடம் விசாரித்தபோது, அவர்களுக்கும் தெரியவில்லை.

காவல் நிலையத்தில் தாய் புகார்

இதனால் பதற்றமடைந்த மாணவியின் தாய், அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தபோது, 11-ம் தேதி காலையே மாணவி வீட்டை விட்டு அலைபேசியில் பேசியவாறே சென்றதாகவும், அவர் அணிந்திருந்த ஆடையின் வண்ணத்தையும் நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

பல இடங்களில் தேடிப்பார்த்தும் மாணவி கிடைக்காததால் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் தாய் புகார் அளித்தார். இப்புகார் கோவை ராமநாதபுரத்தில் உள்ள மாநகர கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு, கடந்த 13-ம் தேதி ஆள் மாயம் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், சிவானந்தபுரத்தில் மாணவி வசிக்கும் பகுதி அருகேயுள்ள புதரில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக போலீஸுக்கு தகவல் வந்தது. சரவணம்பட்டி போலீஸார் ஆய்வு செய்ததில், புதரில் சாக்குமூட்டை கிடந்தது.

பிரித்து பார்த்தபோது, கை, கால்கள், வாய் கட்டப்பட்ட நிலையில், காணாமல் போன மாணவியின் உடல் உள்ளே இருந்தது. முகம் மிகவும் சிதைந்து காணப்பட்டது. உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீஸார் அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து ஆள் மாயம் வழக்கு கொலை வழக்காக மாற்றி பதிவு செய்யப்பட்டு உள்ளது. மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

3 தனிப்படைகள் அமைப்பு

இதுதொடர்பாக மாநகர காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, “சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடக்கிறது” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in