

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவியாக பொறுப்பு வகிப்பவர் சுவேதா(40). இவரது கணவர் கணேசன்(45). இவர் மீது கோவை மாவட்டம் குனியமுத்தூர் மற்றும் போத்தனூர் காவல் நிலையங்களில் 4 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 11-ம் தேதி கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மாநகராட்சி ஊழியர் போல் நாடகமாடி மூதாட்டியிடம் 4 பவுன் தங்கம் மற்றும் வைர நகைகளை திருடிய வழக்கில் கணேசனுக்கு முக்கிய தொடர்பு இருப்பது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.
இதுகுறித்து குனியமுத்தூர் காவல் துறையினர் கணேசன் உட்பட 4 பேர் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
இதைத்தொடர்ந்து, ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பகுதியில் கோவை மாவட்ட தனிப்படை காவல் துறையினர் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். கணேசன் கையில் விலங்கிட்டு அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிச்செல்ல முயன்றபோது, கணேசனின் மனைவி சுவேதா மற்றும் ஆதரவாளர்கள் காவல் துறையினரை தாக்கினர். காவல் துறையினரிடமிருந்து கணேசனை தப்பிக்க வைத்ததாக ஊராட்சி மன்ற தலைவி சுவேதா உட்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, முதற் கட்டமாக 10 பேரை கைது செய்தனர்.
அடுத்த 2 நாட்கள் கழித்து தலைமறைவாக இருந்த கணே சனையும் கைது செய்து, கோவைக்கு அழைத்துச்சென்று சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், கோவை மாவட் டம் குனியமுத்தூர் ஆய்வாளர் வேல்முருகன் தலைமையில் 6 காவலர்கள், உமராபாத் காவல் ஆய்வாளர் யுவராணி தலைமையில் 6 காவலர்கள் என மொத்தம் 12 காவலர்கள் ஊராட்சி மன்றத் தலைவி சுவேதா வீட்டில் நேற்று 3 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தினர். அப்போது, வீட்டிலிருந்து சில ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாக காவல்துறையினர் தெரிவித் தனர். மேலும், சுவேதா மற்றும் தலைமறைவாக உள்ள 6 பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.