

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே கீழச்சேரி பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு தேவையான ஒப்பந்தஊழியர்களை பணியில் அமர்த்துவதில் வடமாநிலதொழிலாளர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால் தொழிற்சாலை நிர்வாகத்துக்கும், ஒப்பந்த ஊழியர்களை பணியில் அமர்த்தும் சில நிறுவனங்களுக்கும் இடையே பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மர்ம கும்பல் ஒன்று, நேற்று முன்தினம் இரவு பேரம்பாக்கம் பகுதியில், வடமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள வீட்டு வளாகத்தில் திடீர் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், படுகாயமடைந்தஅசாம் மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் அசீம்(20), பத்ரூல் இஸ்லாம், அப்துல்ராவ், ஜாகீர் உசேன், ஜீலானி ஆகிய 5 பேர் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், அப்துல் அசீம்சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த மப்பேடு போலீஸார், ஒப்பந்த ஊழியர்களை பணியில் அமர்த்தும் நிறுவனங்களை நடத்தி வந்த மப்பேடு முத்தீஷ்(24), சோழியம்பாக்கம் பிரபு(33), பிரபுவின் நிறுவன ஊழியர் கடம்பத்தூர் தினேஷ்(29) ஆகியோரை கைது செய்தனர்.