

பல்லடம் சார் நிலை கருவூலத்தில் கொள்ளை முயற்சி வழக்கில் மூளையாகச் செயல்பட்ட மங்கலம் காவலர் தலைமறைவான நிலையில், அவரைப் பணியிடை நீக்கம் செய்து திருப்பூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் உத்தரவிட்டார்.
பல்லடத்தில் சார் நிலை கருவூலம் உள்ளது. இந்தக் கருவூலத்துக்குக் கடந்த 8-ம் தேதி காலை வழக்கம் போல் அலுவலர்கள் பணிக்கு வந்தனர். அப்போது, சார் நிலை கருவூலத்தின் கதவு மற்றும் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த லாக்கரின் பூட்டும் சேதமடைந்திருந்தது. லாக்கரை உடைக்க முடியாத நிலையில், அது சேதமான நிலையில் தப்பியது. இது தொடர்பாக பல்லடம் சார் நிலை கருவூலர் மீனாட்சி பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளைக் கொண்டு போலீஸார் விசாரித்தனர்.
இது தொடர்பாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (37) மற்றும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த பூபாலன் (35) ஆகியோரைக் கைது செய்தனர். அப்போது அவர்களிடம் விசாரிக்கப்பட்டது.
அதில் பூபாலனின் அண்ணன் ரவிச்சந்திரன் (37) மங்கலம் காவல் நிலையத்தில் காவலராகக் கடந்த 3 மாதங்களாகப் பணியாற்றி வந்ததும், அதற்கு முன்பு பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் பணியாற்றியதும் தெரியவந்தது. இதையடுத்து, காவலர் ரவிச்சந்திரன் கொடுத்த தகவலின்படி, கொள்ளையடிக்கத் திட்டமிட்டது தெரியவந்தது.
இதையடுத்து ரவிச்சந்திரன் மங்கலம் காவல் நிலையத்தில் வேலைக்குச் செல்லாமல் கடந்த சில நாட்களாகத் தலைமறைவானார். அவர் மீது, பல்லடம் போலீஸார் கூட்டுச் சதி, கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டியது உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
கொள்ளையடிக்கும் திட்டத்துக்கு மூளையாகச் செயல்பட்டதாகக் கூறி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் உத்தரவின் பேரில், மங்கலம் காவலர் ரவிச்சந்திரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக உத்தரவிட்டுள்ளார்.