

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே ஆடு திருடர்களை துரத்தி சென்ற திருச்சி மாவட்டம் நவல்பட்டு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் இன்று (நவ.21) அதிகாலை வெட்டிக்கொலை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு அருகே சந்தைவெளியைச் சேர்ந்தவர் பூமிநாதன்(55). இவர், கடந்த 2 ஆண்டுகளாக திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில், இவரும், அதேக் காவல் நிலையத்தின் தலைமைக் காவலர் சித்திரவேல் ஆகிய இருவரும் இன்று (நவ.21) அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்திருந்தனர்.
திருச்சி மாவட்டம் பூலாங்குளத்துப்பட்டி எனும் இடத்தில் 2 மோட்டார் சைக்கிள்களில் ஒரு ஆடைத் திருடிக்கொண்டு 4 பேர் வந்துள்ளனர். இவர்களை நிறுத்தியபோது, அவர்கள் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.
அதில், ஒரு மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேரை 2 போலீஸாரும் தனித்தனி மோட்டார் சைக்கிள்களில் விடாமல் துரத்தியுள்ளனர். திருச்சி மாவட்டம் முடிந்து புதுக்கோட்டை மாவட்டத்துக்குள் நுழைந்த பிறகும் விடவில்லை. சுமார் 25 கிலோ மீட்டர் தூரம் துரத்திய நிலையில் கீரனூர் அருகே பள்ளத்துப்பட்டி ரயில்வே சுரங்க பாதையில் தண்ணீர் நிரம்பி இருந்ததால் அந்த பாதை அடைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து,அந்த வழியே செல்ல முடியாமல் அதே இடத்திலேயே மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு ஓட முயன்ற 2 பேரையும், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் மடக்கிப் பிடித்தார். பின்தொடர்ந்து வந்த சித்திரவேலுக்கு இது குறித்து போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
எனினும், ஆடு திருடர்கள் 2 பேரும் பூமிநாதனைத் தாக்கிவிட்டு தப்பியோட முயன்றனர். எனினும், 2 பேரையும் தன்பிடியில் இருந்து ஓடிவிடாமல் போராடிக் கொண்டிருந்தநிலையில், தாங்கள் வைத்திருந்த கத்தியால் தலையில் வெட்டியதில் அந்த இடத்திலேயே பூமிநாதன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, சித்திரவேல் வந்து பார்த்தபிறகு, காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பிறகு, திருச்சி ஐஜி வே.பாலகிருஷ்ணன், டிஐஜி சரவண சுந்தர், மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், எஸ்.பி சுஜித்குமார் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.சம்பம் குறித்து கீரனூர் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காவல் ஆய்வாளர் உடலைக் கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்து விசாரித்து வருகின்றனர். மேலும், ஆயுதங்கள் எதையும் விட்டு சென்றுள்ளனரா என சுரங்கப் பாதையில் தேங்கி இருந்த தண்ணீரை வெளியேற்றியும், வாய்க்கால் மற்றும் வயல் பகுதியில் போலீஸார் தேடி வருகின்றனர்.
பூமிநாதனுக்கு மனைவி மகன் உள்ளனர். மகன், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக நூற்றுக்கணக்கான ஆடுகள் திருடுபோன நிலையில், ஆடு திருடர்களால் உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் காவல் துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.