

போலி ஆவணங்களை வைத்து நிதி மோசடியில் ஈடுபட்ட நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மண்ணடி பகுதியில் உள்ள மூர் தெருவைச் சேர்ந்தவர் லியாகத் அலி. துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள மின்னணு சாதனங்களைச் சரக்கு விமானங்களிலும், கப்பல்கள் மூலமாகவும் இறக்குமதி செய்ததாக லியாகத் அலி போலி ஆவணங்களை உருவாக்கி பெருமளவில் நிதி மோசடி செய்திருக்கிறார். இதன் மூலமாகக் கணக்கில் வராத பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பியதை அறிந்த சென்னை மண்டல மத்திய அமலாக்கத்துறை, சிறப்பு தனிப்படை அமைத்து லியாகத் அலியைக் கைது செய்தது.
புலன் விசாரணையில், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில் முறையற்ற வகையில் கணக்கு தொடங்கி பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதை அமலாக்கத் துறை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
மோசடி நடைபெற்று இருப்பது உறுதியானதால் இந்தியன் வங்கிக் கணக்கில் இருந்த லியாகத் அலியின் கணக்கில் பணம் ரூ. 1.75 கோடி முடக்கப்பட்டது. இந்த வழக்கு சென்னையில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் நீதிபதி திருவேங்கடசீனிவாசன் முன்னிலையில் நடந்தது. அமலாக்கத்துறை சார்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி வாதாடினார்.
வழக்கை விசாரித்த 12ஆவது கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தின் (மத்திய புலனாய்வுத்துறை வழக்குகள் )நீதிபதி திருவேங்கடசீனிவாசன், லியாகத் அலி மீதான சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டை உறுதி செய்ததுடன், லியாகத் அலிக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.1 கோடி அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார். மேலும் 1 கோடி ரூபாய் அபராதம் செலுத்தாவிட்டால் கூடுதலாக 1 வருட சிறை தண்டனை என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.