புதுவையில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் ஐஆர்பிஎன் காவலர் மீது வழக்கு: உடந்தையாக இருந்ததாக தாய் கைது

புதுவையில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் ஐஆர்பிஎன் காவலர் மீது வழக்கு: உடந்தையாக இருந்ததாக தாய் கைது
Updated on
1 min read

புதுச்சேரியில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஐஆர்பிஎன் காவலர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான அவரைத் தேடி வருகின்றனர். மேலும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயைக் கைது செய்து போலீஸார் சிறையில் அடைத்துள்ளனர்.

புதுச்சேரி தவளக்குப்பம் காவல் நிலையச் சரகத்தில் உள்ள மீனவ கிராமத்தைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமி பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளானதாக குழந்தைகள் நல வாரியத்தினர் தவளக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் தந்தனர்.

இப்புகார் தொடர்பாக தவளக்குப்பம் போலீஸார் கூறுகையில், "எங்கள் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட மீனவ கிராமத்தைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமி, தனது தாயுடன் வசித்து வருகிறார். அவரது தந்தை வெளிநாட்டில் பணிபுரிகிறார். இப்பகுதியைச் சேர்ந்த ஐஆர்பிஎன் காவலரான திருமணமாகாத குமரவேல் (32), சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

சிறுமி தனது தாயிடம் இதுகுறித்து தெரிவித்தும் அவர் குமரவேலைக் கண்டிக்காததால் தனது தந்தையிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார். இதையடுத்து வெளிநாட்டிலிருந்து உடனடியாகப் புதுச்சேரி திரும்பிய சிறுமியின் தந்தை குழந்தைகள் நலவாரியத்தை நாடினார்.

இதையடுத்து சிறுமியிடம் விசாரித்து, புகாரை நலவாரியத்தினர் அளித்தனர். அப்புகாரின் பேரில் போக்சோ பிரிவின் கீழ் ஐஆர்பிஎன் காவலர் குமரவேல், மற்றும் பாலியல் சீண்டலுக்கு உடந்தையாக இருந்ததாக அச்சிறுமியின் தாய் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குமரவேல் தலைமறைவாக உள்ளதால் தேடி வருகிறோம். சிறுமியின் தாயைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்" என்று குறிப்பிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in