எட்டயபுரம் அருகே கடத்தலுக்குக் கொண்டுசென்ற 1.3 டன் விரலி மஞ்சள் பறிமுதல்

எட்டயபுரம் அருகே கடத்தலுக்குக் கொண்டுசென்ற 1.3 டன் விரலி மஞ்சள் பறிமுதல்
Updated on
2 min read

எட்டயபுரம் அருகே கடத்தலுக்காகக் கொண்டுசெல்லப்பட்ட 1.3 டன் விரலி மஞ்சள் மூட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் விரலி மஞ்சள், ஏலக்காய், வெங்காய விதை ஆகியவற்றுக்கு 100 சதவீத இறக்குமதி விதிக்கப்படுகிறது. இதன் காரணமாக இலங்கையில் சுங்க வரி ஏய்ப்புக்காகவும் கூடுதல் விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காகவும் தூத்துக்குடி மாவட்டக் கடல் பகுதியில் இருந்து விரலி மஞ்சள், ஏலக்காய், வெங்காய விதைகள் உள்ளிட்டவையும், அந்த நாட்டில் தடை செய்யப்பட்ட கஞ்சா, பீடி இலைகள் ஆகியவற்றையும் படகுகளில் கடத்த முயல்வதும், அவற்றை போலீஸார் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக நடந்து வருகிறது. மேலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், எட்டயபுரம் அருகே விரலி மஞ்சள் கடத்தப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. காவல் ஆய்வாளர் ஜின்னா பீர் முகம்மது தலைமையிலான போலீஸார் நேற்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதில், சித்தலக்கரை அருகே வாகன சோதனையில் போலீஸார் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த சுமை ஆட்டோ நிற்காமல் சென்றது. இதையடுத்து போலீஸார் விரட்டிச் சென்று சுமை ஆட்டோவை மடக்கிப் பிடித்தனர். அப்போது அதிலிருந்து தப்ப முயன்ற இருவரையும் சுற்றி வளைத்தனர்.

சுமை ஆட்டோவை சோதனையிட்டபோது, அதில் தலா 35 கிலோ வீதம் 37 மூடைகளில் விரலி மஞ்சள் இருந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.1.50 லட்சமாகும். இதையடுத்து சுமை ஆட்டோவில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் மதுரை நூல் சாலை இஸ்மாயில்புரம் 8-வது தெருவைச் சேர்ந்த சாகுல் ஹமீது மகன் ஹக்கிம் சுல்தான் (31), மதுரை நெல்லு பேட்டை கைமார் ராவுத்தர் தோப்பை நாகூர்மீரான் மகன் இப்ராஹீம் ஷா (36) என்பது தெரியவந்தது.

இவர்கள், தூத்துக்குடி மாவட்டக் கடல் பகுதிகள் வழியாகப் படகு மூலமாக இலங்கைக்குக் கடத்த இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார், சுமார் 1.5 டன் விரலி மஞ்சள் மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in