சிதம்பரத்தில் நந்தனார் அரசுப் பள்ளி மாணவரைத் தாக்கிய ஆசிரியர் சஸ்பெண்ட்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

சிதம்பரம் நந்தனார் அரசுப் பள்ளி மாணவரைக் கடுமையாகத் தாக்கிய ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரைப் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்தார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செயல்பட்டுவரும் நந்தனார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பயிலும் பிளஸ் 2 மாணவர்கள் சிலர் வகுப்புகளுக்குச் சரியாகச் செல்லாமல் வெளியே சுற்றிவந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, மாணவர்களைப் பள்ளி ஆசிரியர்கள் கண்காணித்தனர். அப்போது, அந்தப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் 6 மாணவர்கள் பள்ளிக்கு வராமல் வெளியே சுற்றித் திரிவது தெரியவந்ததைத் தொடர்ந்து, அவர்களைப் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் சுப்பிரமணியன் (55) நேற்று முன்தினம் அழைத்துக் கண்டித்து முட்டி போட வைத்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது, மாணவர் ஒருவரை அழைத்த ஆசிரியர், அவரைப் பிரம்பால் சரமாரியாகத் தாக்கியும், காலால் உதைத்தும் தாக்கியதை மாணவர் ஒருவர் செல்போனில் படம் பிடித்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ வைரலாகப் பரவியது. இதைக் கண்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து, சிதம்பரம் நகரக் காவல் நிலையத்தில் மாணவர் சஞ்சய் கொடுத்த புகாரின் பேரில், போலீஸார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஆசிரியர் சுப்பிரமணியனை இன்று (அக்.15) கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிதம்பரம் கிளைச் சிறையில் அடைத்தனர்.

மாணவர்களை ஆசிரியர் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, ஆசிரியர் சுப்பிரமணியனை சஸ்பெண்ட் செய்து மாவட்டக் கல்வி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, சஸ்பெண்ட் உத்தரவை சிதம்பரம் கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள ஆசிரியர் சுப்பிரமணியத்திடம் சிதம்பரம் ஆதிதிராவிட நலத்துறை வட்டாட்சியர் சத்தியன், பள்ளித் தலைமையாசிரியர் குகநாதன் ஆகியோர் நேரில் வழங்கினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in