தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கடத்தல்

கடத்திச் செல்லப்பட்ட குழந்தையின் பெற்றோர்.
கடத்திச் செல்லப்பட்ட குழந்தையின் பெற்றோர்.
Updated on
2 min read

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கடத்தப்பட்டது.

தஞ்சாவூர் பர்மா காலனியைச் சேர்ந்தவர் குணசேகரன் (24), டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி (22). இவர்களுக்குக் கடந்த ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ராஜலட்சுமிக்குக் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர், தஞ்சாவூர் ராசா மிராசுதாரர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்றைய தினம் அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், ராஜலட்சுமி அனுமதிக்கப்பட்டிருந்த மாடி வார்டில் ஒரு பெண் அவருக்கு என்ன உதவி வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள் எனக் கூறி உதவி செய்வதுபோல் நடித்துள்ளார்.

கடந்த 4 நாட்களாகவே ராஜலட்சுமிக்கு உதவுவதுபோல் நடித்து அவருடனேயே இருந்துள்ளார். இதனால், அந்தப் பெண் மீது ராஜலட்சுமி நம்பிக்கை வைத்திருந்தார்.

இன்று, 8ஆம் தேதி காலை அந்தப் பெண் ராஜலட்சுமியிடம், "நீங்கள் குளித்துவிட்டு வாருங்கள். நான் குழந்தையைப் பார்த்துக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார். இதனை நம்பிய ராஜலட்சுமியும் குளிக்கச் சென்றார்.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட அப்பெண் பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையைக் கட்டைப்பையில் வைத்துக் கடத்திக் கொண்டு வேகமாகச் சென்றுள்ளார். இதற்கிடையே, குளிக்கச் சென்றுவிட்டு வார்டுக்கு வந்த ராஜலட்சுமி, குழந்தையைக் காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். பதறியடித்துக் கொண்டு பல இடங்களில் தேடிப் பார்த்தார். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை.

குழந்தையைக் கடத்திச் சென்ற பெண்.
குழந்தையைக் கடத்திச் சென்ற பெண்.

இதுகுறித்து, உடனடியாகத் தனது கணவர் குணசேகரனுக்குத் தகவல் தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்து அவர் மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனையில் திரண்டனர். பக்கத்து வார்டில் உள்ளவர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் விசாரித்தனர். ஆனால், குழந்தையின் நிலை தெரியவில்லை. அப்போதுதான் ராஜலட்சுமிக்கு அந்தப் பெண் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதுகுறித்து, அவர் கணவரிடம் கூறினார். மேலும், இது தொடர்பாக மேற்கு போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், தஞ்சாவூர் நகர டிஎஸ்பி கபிலன் மற்றும் போலீஸார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்தபோது, அந்தப் பெண் கட்டைப்பையில் குழந்தையைத் தூக்கிக் கொண்டு கடத்திச் சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தன. அதன் அடிப்படையில், போலீஸார் அந்தப் பெண்ணைத் தேடி வருகின்றனர். மேலும், நகர் முழுவதும் தகவல் கொடுத்து அந்தப் பெண் பற்றிய அடையாளங்களைக் கூறி, தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in