Last Updated : 07 Oct, 2021 06:46 PM

 

Published : 07 Oct 2021 06:46 PM
Last Updated : 07 Oct 2021 06:46 PM

உள்ளாட்சித் தேர்தல் பணி முடிந்து வீடு திரும்பிய அரசுப் பள்ளி ஆசிரியை மீது தாக்குதல்; நகை பறிக்க முயற்சி: 2 பேருக்கு போலீஸ் வலை

உள்ளாட்சித் தேர்தல் பணியை முடித்துவிட்டு அதிகாலையில் வீடு திரும்பிய அரசுப் பள்ளி ஆசிரியையைத் தாக்கி நகை பறிக்க முயன்ற இரண்டு பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி, வேல்ராம்பேட் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (40). இவரது மனைவி செங்கொடி பாரதி (35). இவர் விழுப்புரம் மாவட்டம் புதுக்குப்பம் அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். நேற்று இம்மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.

இதற்காகத் திருக்கனூரை அடுத்த தமிழகப் பகுதியான சித்தலம்பட்டு கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் செங்கொடி பாரதி தேர்தல் பணிக்குச் சென்றிருந்தார். பின்னர் வீட்டுக்குச் செல்ல அங்கு உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவுப் பணிகளை முடித்துவிட்டு பூத்தில் இருந்த பணியாளர்கள் அனைவரும் ஒரே காரில் புறப்பட்டுச் சென்றனர்.

ஆனால், செங்கொடி பாரதி மட்டும் தனியாகக் காத்திருந்த நிலையில், தனது கணவரை அழைத்துள்ளார். அவர் மோட்டார் பைக்கில் அங்கு சென்றார். பிறகு அவர்கள் இருவரும் இன்று (அக். 7) அதிகாலை புறப்பட்டு பிள்ளையார்குப்பம் வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

இடையில் பிள்ளையார்குப்பம் பெட்ரோல் பங்க்கில் சண்முகசுந்தரம் வண்டியை நிறுத்தி பெட்ரோல் நிரப்பினார். பிறகு அங்கிருந்து புறப்பட்ட அவர்கள் பத்துக்கண்ணு நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென இருட்டான பகுதியில் நின்றிருந்த 2 பேர் அவர்களை வழிமறித்தனர்.

ஆனால், சண்முகசுந்தரம் மோட்டார் பைக்கை நிறுத்தாமல் வளைந்து நெளிந்தபடி வண்டியை வேகமாக ஓட்டினார். அச்சமயம் செங்கொடி பாரதி அணிந்திருந்த நகைகளை வழிப்பறி செய்யும் நோக்கில் அந்த மர்ம நபர்கள் 2 பேரும் தாங்கள் கையில் வைத்திருந்த கத்தி, இரும்பு பைப் உள்ளிட்டவற்றால் தம்பதியைத் தாக்கினர்.

இதில் செங்கொடி பாரதியின் முதுகுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அதனைச் சமாளித்த தம்பதி இருவரும், அந்த மர்ம நபர்களிடம் இருந்து தப்பினர். பிறகு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் ஆசிரியை சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

உடனே இதுகுறித்து வில்லியனூர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட முயன்ற மர்ம நபர்கள் இருவரையும் தேடி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x