Published : 02 Oct 2021 08:29 PM
Last Updated : 02 Oct 2021 08:29 PM

கயத்தாறில் ரியல் எஸ்டேட் உரிமையாளரை கடத்தி பணம், நகை கொள்ளை: 6 பேர் கைது

கயத்தாறு அருகே சன்னதுபுதுக்குடியில் ரியல் எஸ்டேட் உரிமையாளரை கடத்தி கொள்ளையடித்த பணம், நகைகளை எஸ்.பி.ஜெயக்குமார் பார்வையிட்டார்.

கோவில்பட்டி 

கயத்தாறு பகுதியில் ரியல் எஸ்டேட் உரிமையாளரை கடத்தி கொலை செய்து விடுவதாக மிரட்டி பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்த கார் ஓட்டுநர் உட்பட 6 பேர் போலீஸார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து ரூ.14 லட்சம் மதிப்புள்ள 40 பவுன் தங்க நகைகள், ரூ.6 லட்சம் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர்.

கோவில்பட்டி பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணக்குமார் (40). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் தனது காரில் கடந்த 9-ம் தேதி காரில் திருநெல்வேலியில் பத்திரப்பதிவுக்கு சென்றார். காரை கோவில்பட்டி அருகே மந்திதோப்பை சேர்ந்த முனியசாமி மகன் சேதுபதி (31) என்பவர் ஓட்டினார்.

கயத்தாறை அடுத்த சன்னது புதுக்குடி அருகே சென்றபோது, கார் ஓட்டுநர் சேதுபதி காரை நிறுத்தியுள்ளார். அப்போது காருக்குள் ஏறிய 3 மர்ம நபர்கள் சரவணக்குமாரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயின், 3.5 பவுன் கைச் செயின் மற்றும் ரூ.20,000 பணம் ஆகியவற்றை பறித்தனர். மேலும், சரவணக்குமார் செல்போனிலிருந்து அவரது தந்தை முருகேச பாண்டியனை அழைத்து, உங்கள் மகன் சரவணக்குமாரை கடத்தி வைத்துள்ளோம் எனக் கூறி, ஒரு கோடி ரூபாய் வேண்டும் என கேட்டு மிரட்டியுள்ளனர்.

அதற்கு அவர் தன்னிடம் இருந்த ரூ.12 லட்சம் பணம் மற்றும் 40 பவுன் தங்க நகைகளையும் எடுத்துகொண்டு காரில் வருவதாக செல்போனில் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்கள் கூறியபடி, சன்னது புதுக்குடி பகுதியில் உள்ள முட்புதரில் நகை, பணத்தை முருகேச பாண்டியன் வைத்துச்சென்றார். அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்களுடன், காரில் இருந்த 3 பேரும் சேர்ந்து, முருகேச பாண்டியன் வைத்துச் சென்ற பணம், நகைகளை எடுத்து கொண்டு சரவணக்குமாரிடம், இது பற்றி வெளியே கூறினால் கொன்று விடுவோம் என்று கத்தியை காட்டி மிரட்டி தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து சரவணக்குமார் கடந்த 30-ம் தேதி கயத்தாறு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் மேற்பார்வையில் கயத்தாறு காவல் ஆய்வாளர் முத்து தலைமையில் தனிப்படை அமைத்து எஸ்.பி.ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

தனிப்படையினர் நடத்திய விசாரணையில், சரவணக்குமாரிடம் நகை, பணத்தை கொள்ளையடித்தது, கோவில்பட்டி அருகே காப்புலிங்கம்பட்டி பகுதியை சேர்ந்த செல்வம் மகன் சங்கிலிபாண்டியன் (19), மாடசாமி மகன் செல்வம்(38), கோவில்பட்டி கடலையூர் ரோடு பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் மாடசாமி (என்ற) கோபி (35), அன்னைதெரசா நகரை சேர்ந்த கருப்பசாமி மகன் பொன்ராஜ் (33), பங்களா தெருவை சேர்ந்த நாராயணன் மகன் பொன்கார்த்திக் (24) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் தனிப்படையினர் கைது செய்து நடத்திய விசாரணையில், சரவணக்குமார் குறித்து தகவல்கள் கொடுத்து, கொள்ளையடிப்பதற்கு திட்டங்கள் தீட்டி மூளையாக செயல்பட்டது கார் ஓட்டுநர் சேதுபதி (31) என்பது தெரியவந்தது. அவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து ரூ.14 லட்சம் மதிப்புள்ள 40 பவுன் தங்க நகைகள், ரூ.6 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் கொள்ளயைடித்த பணத்தில் வாங்கிய ரூ.75,000 மதிப்புள்ள மோட்டார் சைக்கிள், சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 3 கத்திகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்ட தனிப்படையினரை பாராட்டி எஸ்.பி.ஜெயக்குமார் வெகுமதி வழங்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x