Published : 22 Sep 2021 09:20 PM
Last Updated : 22 Sep 2021 09:20 PM

ஆப்கனிலிருந்து கடத்திவரப்பட்ட 3004 கிலோ ஹெராயின் பறிமுதல்: சென்னையைச் சேர்ந்தவர் உட்பட 8 பேர் கைது 

ஆப்கனிலிருந்து கடத்திவரப்பட்ட 3004 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்தவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தியாவுக்குள் ஹெராயின் போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுக்கும் தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தகாரிலிருந்து ஈரானில் உள்ள பாந்தர் அப்பாஸ் வழியாக முந்த்ரா துறைமுகத்திற்கு 2021 செப்டம்பர் 13 அன்று வந்தடைந்த இரண்டு கொள்கலன்களை வருவாய் நுண்ணறிவு இயக்குநரகம் தன் வசம் கொண்டு வந்தது.

ஓரளவு பதப்படுத்தப்பட்ட தூள் கற்கள் அந்த கொள்கலன்களில் இருப்பதாகக் கூறப்பட்டது. 2021 செப்டம்பர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் அந்த கொள்கலன்களில் இருந்து 2988 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.

மிகப்பெரிய பைகளில் ஹெராயின் ஒளித்து வைக்கப்பட்டு அதன் மீது தூள் கற்கள் வைக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக தூள் கற்களில் இருந்து ஹெராயினை பிரித்தெடுக்க அதிக அளவிலான முயற்சிகள் தேவைப்பட்டன.

இதைத் தொடர்ந்து, புதுடெல்லி, நொய்டா, சென்னை, கோயம்புத்தூர், அகமதாபாத், மாண்ட்வி, காந்திதாம் மற்றும் விஜயவாடா உள்ளிட்ட இடங்களில் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. டெல்லியில் உள்ள ஒரு கிடங்கில் இருந்து 16.1 கிலோ ஹெராயினும், நொய்டாவில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் இருந்து கொகைன் என சந்தேகிக்கப்படும் 10.2 கிலோ பவுடரும், ஹெராயின் என்று சந்தேகிக்கப்படும் 11 கிலோ பொருளும் பறிமுதல் செய்யப்பட்டன.

நான்கு ஆப்கானியர்கள், உஸ்பெக்கிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் மற்றும் 3 இந்தியர்கள் என மொத்தம் 8 பேர் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொள்கலன்களை இறக்குமதி செய்ய பயன்படுத்தப்பட்ட இறக்குமதி ஏற்றுமதி குறியீட்டுக்கு சொந்தக்காரர் கைது செய்யப்பட்ட மூன்று இந்தியர்களில் ஒருவர் ஆவார். சென்னையில் அவர் கைது செய்யப்பட்டார். மேற்கொண்டு விசாரணைகள் நடைப்பெற்று வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x