

பெங்களூருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதனால் மூன்று நாட்களாக பூட்டிய வீட்டினுள் சடலங்களுடன் 2 வயது குழந்தை ஒன்று சிக்கிக் கொண்டது. வீட்டினுள் இருந்து துர்நாற்றம் வீசவே குழந்தையை போலீஸார் மீட்டுள்ளனர்.
பெங்களூருவைச் சேர்ந்தவர் சங்கர். இவருக்கு மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகன் இருந்தனர். சில தினங்களுக்கு முன்னர் இவரது இளைய மகள் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சண்டையிட்டு பெற்றோர் வீட்டுக்கு திரும்பியுள்ளார். இதனால் சங்கர் அதிருப்தியடைந்தார்.
இது தொடர்பாக குடும்பத்தில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சங்கர் கோபமடைந்து வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். அவருக்குக் குடும்பத்தினர் தொடர்ச்சியாக போன் செய்தும் கூட அவர் அழைப்பை ஏற்கவில்லை.
பின்னர், 5 நாட்களுக்குப் பின் நேற்று சங்கர் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசவே பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது வீட்டினுள் 5 பேர் தூக்கில் தொங்கியபடி கிடந்தனர். 9 மாதக் குழந்தை ஒன்று பட்டினியால் இறந்து கிடந்தது.
அந்த வீட்டிலிருந்த 2 வயது குழந்தை மட்டும் உயிருக்குப் போராடிய நிலையில் இருந்தது. அந்தக் குழந்தையை மீட்டு போலீஸார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இச்சம்பவம் அறிந்து வீட்டுக்கு வந்த சங்கர் அதிர்ந்துபோனார். இருப்பினும் ஐந்து நாட்களாக யாருடைய போனையும் ஏற்காமல் இருந்த சங்கரிடம் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.