

உதகையில் மனைவியைக் கொன்ற வழக்கில் தீர்ப்பு வழங்கும் நேரத்தில் குற்றவாளி தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள எடப்பள்ளி அணியாடா பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பென்னி (58). இவரது மனைவி அந்தோணியம்மாள் (53).
கடந்த சில வருடங்களாக பென்னி, அந்தோணியம்மாள் நடத்தை மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். அதேபோல் நடந்த தகராறில் அந்தோணியம்மாள் கோபித்துக்கொண்டு தனது மூத்த மகள் இருக்கும் நான்சச் எஸ்டேட்டுக்குச் சென்றுள்ளார்.
2017-ம் ஆண்டு பென்னி, நான்சச் எஸ்டேட் சென்று, மீண்டும் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரமடைந்த பென்னி அருகில் இருந்த கத்தியை எடுத்து அந்தோணியம்மாளைக் குத்திக் கொன்றார்.
கொலக்கொம்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்து பென்னியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு விசாரணை உதகை மகளிர் நீதிமன்றத்தில் நடந்துவந்த நிலையில் இன்று, இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் நீதிபதி குலசேகரன் அறிவித்திருந்தார்.
காலை 10.30 மணிக்கு வழக்கைத் தொடங்கிய நீதிபதி 3 மணிக்குத் தீர்ப்பு கூறுவதாக அறிவித்தார். காலையில் நீதிமன்ற வளாகம் வந்திருந்த பென்னியை மதியம் 2 மணி அளவில் காணவில்லை. பதறிப்போன போலீஸார் தப்பி ஓடிய பென்னியைத் தேடி ஓடினர்.
நீதிபதி கொடுக்கும் தீர்ப்புக்கு பயந்து அவர் தப்பியோடியதாக போலீஸார் கூறினர்.
இந்நிலையில், வண்டிசோலையில் பதுங்கி இருந்த பென்னியைப் பிடித்துக் கைது செய்தனர். இதற்கிடையே கொலைக் குற்றவாளி நேரில் ஆஜராகாததால் நீதிபதி நாளை தீர்ப்பு கூறுவதாக அறிவித்தார்.
தீர்ப்பு கூறும் நேரத்தில் குற்றவாளி தப்பியோடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.