Last Updated : 11 Sep, 2021 04:54 PM

 

Published : 11 Sep 2021 04:54 PM
Last Updated : 11 Sep 2021 04:54 PM

120 கிலோ கஞ்சாவுடன் வந்த 9 பேரை மடக்கிப் பிடித்த போலீஸார்

தமிழகம் முழுவதும் கஞ்சா வியாபாரம் செய்துவந்த ஆந்திராவைச் சேர்ந்த 6 பேர் உள்ளிட்ட 9 பேர் கொண்ட கும்பலை, கும்பகோணத்தில் தனிப்படை போலீஸார் கைது செய்து 120 கிலோ கஞ்சாவையும், 2 கார்களையும் பறிமுதல் செய்தனர்.

தஞ்சாவூர் சரகத்தில் கஞ்சா விற்பனை அதிக அளவில் இருப்பதாகவும், கடலோரப் பகுதிகளிலிருந்து இலங்கைக்கு கஞ்சா அதிக அளவில் கடத்தப்படுவதாகவும் தஞ்சாவூர் சரக டிஐஜி பிரவேஷ்குமாருக்குத் தகவல் வந்தது.

இதையடுத்து தஞ்சாவூர் டிஐஜியின் தனிப்படைப் பிரிவு ஆய்வாளர் மணிவேல், உதவி ஆய்வாளர் ராஜேஷ்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மோகன், கந்தசாமி, தலைமைக் காவலர் இளையராஜா, காவலர்கள் அருண்மொழி, அழகு, நவீன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீஸார் கடலோரப் பகுதிகளில் ரகசியக் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இதில் நாகப்பட்டினம் வ.உசி. தெருவைச் சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரியான அன்புசெல்வன் (39) என்பவரை போலீஸார் ரகசியமாகக் கண்காணித்தனர். மேலும், அன்புசெல்வனின் கூட்டாளிகளான திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி சரவணன் (42), சென்னை ஈஞ்சம்பாக்கம் கவுதம் (31) ஆகியோர் கஞ்சாவை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் உள்ள பாடகிரி மலைப்பகுதியில் இருந்து வாங்கி வந்து தமிழகம் முழுவதும் விற்பனை செய்தும், படகுகள் மூலம் இலங்கைக்கும் கடத்தி வந்துள்ளனர். இவர்களை போலீஸார் ரகசியமாகக் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு கும்பல் கஞ்சாவுடன் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நோக்கி காரில் வருவதாகவும், அன்புசெல்வன் கூட்டாளிகளுக்கு அந்த கஞ்சாவை வழங்க இருப்பதாகவும் தனிப்படை போலீஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவல்படி, இன்று காலை (11-ம் தேதி) கும்பகோணத்தில் தனிப்படை போலீஸார் ரகசியமாகக் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது இரு கார்களில் வந்த கும்பலை போலீஸார் மடக்கிப் பிடித்து விசாரித்தபோது, காரில் 120 கிலோ கஞ்சா வைத்திருந்ததும், அந்த கார்களில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த குடபிரதாப்சந்த் (25) பத்ரி (23), மகேஸ்வரராவ் (32), ரவி (29), சந்திரா (27), அப்பாராவ் (29) ஆகியோர் இருந்ததும் தெரியவந்தது. அவர்களைப் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அன்புசெல்வன், சரவணன், கவுதம் ஆகியோரையும் தனிப்படை போலீஸார் கைது செய்து, கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து மேற்கு காவல்நிலைய போலீஸார் அவர்களைக் கைது செய்து, 120 கிலோ கஞ்சா, 2 கார்களைப் பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x