'க்ரில் சிக்கன் சரியில்லை'- கடை உரிமையாளரைத் தாக்கிய நபர் கைது

'க்ரில் சிக்கன் சரியில்லை'- கடை உரிமையாளரைத் தாக்கிய நபர் கைது
Updated on
1 min read

சென்னை தி.நகர் பகுதியில் பிரியாணிக் கடையில் தகராறு செய்து கடை உரிமையாளரைத் தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை, தி.நகரைச் சேர்ந்த அஸ்மத் அலி என்பவர், தி.நகர், ராமேஸ்வரம் சாலை, நமஸ்கிருஸ்தம் பிளாட் என்ற இடத்தில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். அஸ்மத் அலியின் மகன் முகமது அர்ஷத் (18) என்பவர் நேற்று (08.9.2021) இரவு தந்தையின் பிரியாணிக் கடையில் இருந்தபோது, தி.நகர் பகுதியைச் சேர்ந்த ஜெகன் என்பவர் கிரில் சிக்கன் வாங்கிச் சென்றுள்ளார்.

ஜெகன் சிறிது நேரம் கழித்து அவரது நண்பர்களுடன் மீண்டும் பிரியாணிக் கடைக்கு வந்து முகமது அர்ஷத்திடம், தான் வாங்கிச் சென்ற கிரில் சிக்கன் சரியில்லை என்றும், கெட்டுப் போன உணவைக் கொடுத்து ஏமாற்றுகிறாய் என்றும் கூறி தகராறு செய்து, கல் மற்றும் கையால் முகமது அர்ஷத்தைத் தாக்கி ரகளையில் ஈடுபட்டார்.

உடனே, அர்ஷத் காவல் கட்டுப்பாட்டறைக்குத் தகவல் கொடுத்ததின்பேரில், R-1 மாம்பலம் காவல்நிலைய சுற்றுக் காவல் வாகன பொறுப்பு காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றபோது, ஜெகன் மற்றும் அவரது நண்பர்கள் ஓடவே, காவல் குழுவினர் துரத்திச் சென்று ஜெகனைப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.

மேலும், ரத்தக் காயமடைந்த முகமது அர்ஷத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபிறகு நடந்த சம்பவம் குறித்து R-1 மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் ஜெகன் பிரியாணிக் கடையில் கிரில் சிக்கன் வாங்கிச் சென்றதும், சிறிது நேரம் கழித்து நண்பர்களுடன் கடைக்குச் சென்று சிக்கன் சரியில்லை எனக் கூறி தகராறு செய்து, தாக்கியதும் தெரியவந்தது.

அதன்பேரில், ஜெகன் (28), என்பவரை கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் ஜெகன் இன்று (09.9.2021) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in