

குடிபோதையில் தாயுடன் தகராறு செய்த தந்தையைத் திருப்பூரில் 15 வயதுச் சிறுவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் எஸ்.ஏ.பி. பகுதி பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீராம் (49). மனைவி ஸ்ரீரேகா. தம்பதியர், அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் உணவகம் நடத்தி வந்தனர். தம்பதியருக்கு 15 வயதில் மகன் உள்ளார். அச்சிறுவனுக்குக் குடிப்பழக்கம் இருந்துள்ளது.
ஸ்ரீரேகா இதய நோயால் பாதிக்கப்பட்டவர். இந்த நிலையில் குடிபோதையில் ஸ்ரீராம், மனைவி ஸ்ரீரேகாவைத் துன்புறுத்தியுள்ளார். இதில் ஸ்ரீரேகா அவதிப்பட்டு வந்தார். ஊரடங்கு காலம் என்பதால், பள்ளி செல்லாமல் பெற்றோருடன் இருந்து வந்த சிறுவன், தந்தையால் தனது தாய் துன்பப்படுவதைக் கண்டு வருந்தியுள்ளார். நேற்றிரவு வழக்கம்போல் ஸ்ரீராம், மனைவி ஸ்ரீரேகாவைக் குடிபோதையில் துன்புறுத்தியுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த சிறுவன், அங்கிருந்த கத்தியை எடுத்து தந்தை ஸ்ரீராமின் நெஞ்சில் குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ஸ்ரீராம் உயிரிழந்தார். இது தொடர்பாக உணவகத்தில் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில், அனுப்பர்பாளையம் போலீஸார், சிறுவன் மீது வழக்குப் பதிவு செய்தனர். அத்துடன் சிறுவனைக் கைது செய்து அனுப்பர்பாளையம் போலீஸார், பொள்ளாச்சி சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.