

காங்கேயம் அருகே வீட்டில் மின்சாரம் பாய்ந்து 8 மாத குழந்தை உயிரிழந்தது.
திண்டுக்கல் மாவட்டம் அஞ்சுகுழிபட்டி மேப்பட்டி தெருவைச் சேர்ந்தவர் மூக்கன் (எ) ரஞ்சித் (24). இவரது மனைவி பச்சையம்மாள் (21). தம்பதியர், கடந்த 3 ஆண்டுகளாக சிவன்மலை அருகே உள்ள ஒரு தேங்காய் உலர் களத்தில் வேலை செய்து வந்தனர்.
தம்பதியருக்கு சத்திதேவி எனும் 8 மாத பெண் குழந்தை உள்ளது. இன்று காலை 7 மணியளவில், மூக்கன் தேங்காய் களத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.
மனைவி பச்சையம்மாள் வீட்டில் சமையல் அறையில் சமைத்து கொண்டிருந்தார். குழந்தை சத்திதேவி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக வீட்டில் இருந்த மின் இணைப்பு ( ஜங்சன் பாக்ஸ்) பெட்டியில் இருந்த வயரை, குழந்தை சத்திதேவி பிடித்து இழுத்துள்ளது.
இதில் மின்சாரம் பாய்ந்து, குழந்தை சத்திதேவி பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தை அசைவில்லாமல் இருப்பதை தாய் அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து, குழந்தையை எடுக்க முயன்றபோது, அவர் மீது மின்சாரம் பாய்ந்ததால் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து குழந்தையை காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு தம்பதியர் எடுத்து சென்றனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை இறந்துவிட்டதாக தகவல் அளித்தனர். இது தொடர்பாக காங்கயம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். மின் இணைப்பு பெட்டியில் பழுதடைந்த பகுதி டேப் ஒட்டப்பட்டிருந்ததாக தெரிகிறது.
இன்று அந்தப் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த டேப் கழன்ற நிலையில், குடும்பத்தினரும் இதனை கவனிக்கவில்லை. இந்த நிலையில் 8 வயது குழந்தை மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளார்.