

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரவுடி படப்பை குணா கைது செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீரநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாவதி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). அவரது தாய், தந்தையருக்குச் சொந்தமான நிலத்தின் சந்தை மதிப்பு விவரத்தினைப் பார்ப்பதற்காக பட்டாவைப் பெற்றுச் சென்றுள்ளார்.
சுங்குவார்சத்திர காவல் நிலைய பிரபல ரவுடி குணா (எ) படப்பை குணா, பிரபாவதியின் தந்தை மதுரமங்கலம் என்பவரிடம் சுமார் 1.5 வருடத்துக்கு முன்பு ரூபாய் 2 லட்சம் கடன் பெற்றுள்ளார். குணா தற்போது மேற்படி நிலத்தின் ஆவணத்தைக் கேட்டு மிரட்டி வந்துள்ளார்.
இந்நிலையில், பிரபாவதி நிலத்தின் பட்டாவைப் பெற்றுச் சென்றதால், படப்பை குணா தனது அடியாட்களை விட்டு பிரபாவதியை மிரட்டியுள்ளார். இது சம்பந்தமாக, பிரபாவதி சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், படப்பை குணா மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது
இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த படப்பை குணாவை சுங்குவார்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் நேற்று (ஆக.16) கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினார். குணா காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி மற்றும் அடிதடி உள்ளிட்ட மொத்தம் 24 வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் ஆவார்.
காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுதாகர், ரவுடிகள் மீது தொடர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதன் பேரில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரவுடிகள் மீது தொடர்ந்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், எவரேனும் பொதுமக்களுக்கும், அவர்களது சொத்துக்கும் அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டால், கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தெரிவித்தார்.