

சென்னை, மாதவரம் காவல் மாவட்டத்தில் 16 வயதுச் சிறுமியைத் திருமணம் செய்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை, மாதவரம் காவல் மாவட்டத்தில் வசித்து வரும் 16 வயதுச் சிறுமியை கடந்த 09.08.2021 அன்று முதல் காணவில்லை என சிறுமியின் பெற்றோர் M-4 செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின்பேரில், சிறுமியைக் காணவில்லை என்ற பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
M-4 செங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில் மேற்படி 16 வயதுச் சிறுமியை ஒரு நபர் அழைத்துச் சென்றது தெரியவந்தது. காவல் குழுவினர் மேற்படி நபரின் அடையாளம் கண்டு, தீவிரத் தேடுதலில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்று (11.08.2021) செங்குன்றம் பேருந்து நிலையத்தின் எதிரில் இருந்த முரளி (23) என்பவரைப் பிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். அவரிடமிருந்து 16 வயதுச் சிறுமி மீட்கப்பட்டார்.
விசாரணையில் மேற்படி 16 வயது சிறுமி ஆன்லைன் வகுப்பு படித்து கொண்டிருந்தபோது கடந்த 4 மாதத்திற்கு முன்னர் செல்போனில், Instagram என்ற செயலி மூலம் முரளி அறிமுகமாகி உள்ளார். அவரிடம் செல்போனில் அடிக்கடி வீடியோகால் மூலம் பேசி சிறுமியைக் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும், ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். மேலும் கடந்த 09.08.2021 அன்று சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாதபோது, சிறுமியை அழைத்துச் சென்று திருமணம் செய்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதன்பேரில் இந்த வழக்குமாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு, 16 வயதுச் சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட முரளியைக் காவல் குழுவினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
விசாரணைக்குப் பின்னர், கைது செய்யப்பட்ட முரளி நேற்று (11.08.2021) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.