Published : 04 Aug 2021 08:18 PM
Last Updated : 04 Aug 2021 08:18 PM

முதல்வர், துணைநிலை ஆளுநர் என முக்கியப் பிரமுகர்களையும் நம்ப வைத்த போலி போலீஸ் அதிகாரி: மூன்று மாநிலங்களில் வலம் வந்தவர் சிக்கியதன் பின்னணி

கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி என வலம் வந்து கேரள முதல்வர், ஆந்திர முன்னாள் முதல்வர், புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநர் என அனைரையும் தான் ஒரு போலீஸ் அதிகாரி என நம்பவைத்து சைரன் வைத்த காரில் உலா வந்த போலி போலீஸ் அதிகாரி பட்டிவீரன்பட்டியில் பிடிபட்டார்.

தலைவர்களின் பாதுகாப்பையும் மீறி அவர்களை சந்தித்து ஏமாற்றி இருப்பது அவர்களின் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாருக்கு பெரும் சோதனையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயன்(42). இவர் போலீஸ் கமிஷனர் போல் சைரன் வைத்த காருடன் தான் ஒரு போலீஸ் உதவி ஆணையர் எனக் கூறிக்கொண்டு கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி என வலம் வந்துள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி ஆகியோரை சந்தித்து தான் ஒரு போலீஸ் உதவி கமிஷனர் என பொய் சொல்லி அவர்களது பாதுகாப்பு அதிகாரிகளையும் ஏமாற்றி சந்தித்துவந்துள்ளார்.

கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் போலீஸ் அதிகாரிகளை சந்தித்துப் பழகி அவர்களிடமும் தான் ஒரு உதவிக் கமிஷனர் என நம்பவைத்து பலருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். இதை வலைதளத்திலும் பரப்பிவந்துள்ளார்.

இந்நிலையில் இவர் கேரள மாநிலத்தில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு குமுளி வழியாக தேனி மாவட்டத்திற்குள் தனது சைரன் வைத்த காரில் வந்துள்ளார். குமுளி சோதனைச்சாவடியில் சந்தேகமடைந்த போலீஸார் விசாரித்தபோது தான் கியூ பிரிவில் உதவி கமிஷனராக பணிபுரிவதாகக் கூறியுள்ளார். தேனி மாவட்டத்திற்குள் வந்தபிறகு, தான் உளவுத்துறை உதவி கமிஷனர் எனக் கூறியுள்ளார். இதுகுறித்து போலீஸார் சந்தேகமடையவே, இவரது காரை தேனி போலீஸார் கண்காணிக்கத் தொடங்கினர்.

கார் திண்டுக்கல் மாவட்டத்திற்குள் நுழைந்ததை அறிந்து திண்டுக்கல் மாவட்ட போலீஸாருக்கு தகவல் தெரிவித்து உதவிக் கமிஷனர் என்று சொல்லிக்கொண்டு ஷைரன் வைத்த காரில் ஒருவர் வருவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கூறி அவரைத் தொடர்ந்து கண்காணிக்க சொல்லியுள்ளனர். இந்நிலையில் வத்தலகுண்டு அருகே பட்டிவீரன்பட்டி பகுதியில் கார் வந்தபோது சோதனைச்சாவடியில் இருந்த போலீஸார்

அவரது காரை நிறுத்தியுள்ளனர். அடையாள அட்டையை கேட்டு வாங்கி பார்த்தபோது அது போலியானது எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரை பட்டிவீரன்பட்டி காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். இதில், அவர் தான் ஒரு போலி போலீஸ் என்பதை ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து போலி துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில், சென்னை கொளத்தூரைச் சேர்ந்த விஜயன் பல தொழில்கள் செய்தும் அவற்றில் அடுத்தடுத்து இழப்பு ஏற்பட்டால் வேலைக்குச் செல்லாமல் வீ்ட்டில் இருந்துள்ளார். இதனால் கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மனைவியை ஏமாற்ற தான் குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று உதவி கமிஷனராகிவிட்டேன் எனக் கூறியுள்ளார். மனைவியை நம்ப வைக்க நண்பர் ஒருவர் உதவியுடன் ஜீப் ஒன்றை வாங்கி அதை போலீஸ் வாகனம் போல் மாற்றியதும் தெரியவந்தது.

ஜீப்பை ஓட்டிச்சென்று மனைவிடம் காட்டி நம்பவும் வைத்துவிட்டார். மனைவியை மட்டுமல்ல, பணிக்குச் செல்வதாகக் கூறி ஜீப்பை எடுத்துக்கொண்டு கேரளா, ஆந்திரா, புதுச்சேரி என வலம் வந்துள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் முதல்வர் சந்திரபாபுநாயுடு, முன்னாள் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆகியோரை சந்தித்து புகைப்படமும் எடுத்து வலைதளங்களில் பரப்பியுள்ளார்.

இவர் மீது சந்தேகப்படும் போலீஸாரிடம் இந்தப் படங்களை காட்டி நம்பவைத்துள்ளார். நமக்கு எதுக்கு வம்பு, என போலீஸாரும் இவரை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.

முதன்முறையாக கேரள மாநிலத்தில் இருந்து தேனி மாவட்டம் வழியாக தமிழகத்திற்குள் நுழைந்த விஜயன், தேனி, திண்டுக்கல் மாவட்ட போலீஸாரின் சந்தேகப்பார்வையில் சிக்கி தற்போது சிறையில் உள்ளார்.

உதவிக் கமிஷனர் எனச் சொல்லிக்கொண்டு தவறாக செயல்பட்டு யாரையும் மிரட்டிப் பணம் பறித்ததாக விசாரணையில் தகவல்கள் கிடைக்கவில்லை.

தனது மனைவியை ஏமாற்றத் தொடங்கிய நாடகம், நிரந்தரமான உதவிக் கமிஷனர் வேஷமாக விஜயனுக்கு மாறிவிட்டது என்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x