

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினரால் மீட்கப்பட்ட ரூ.7 கோடி மதிப்பிலான சுவாமி சிலைகள்.
விழுப்புரம்: கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் ரூ.7 கோடி மதிப்புடைய பழங்கால 3 சுவாமி சிலைகளை கடத்த முயன்ற 5 பேரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு கூட்ரோடு மேம்பாலம் அருகே விழுப்புரம் சரக சிலை திருட்டு தடுப்பு பிரிவு ஆய்வாளர் ரவீந்திரன் தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் பிற்பகலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பிளாஸ்டிக் பைகளுடன் நின்றிருந்த 5 பேரை பிடித்தனர்.
பைகளை சோதனையிட்டதில் 56 செ.மீ. உயரம்- 19 கிலோ எடையில் பூதேவி சிலை, 37 செமீஉயரம் - 10 கிலோ எடையில் திருஞானசம்பந்தர் சிலை, 55 செமீ உயரம் - 12.40 கிலோ எடையில் சிவகாமி சுந்தரி சிலை என மூன்று பழங்கால உலோக சிலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.7 கோடியாகும்.
போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் குறிஞ்சிப்பாடி வடலூரைச் சேர்ந்த சுரேஷ், திருநாரையூரைச் சேர்ந்த ராஜலிங்கம், வடக்கு கொளக்குடியைச் சேர்ந்த முத்துராஜ், திருச்சின்னபுரத்தைச் சேர்ந்த ராஜவேல், செந்தில்குமார் ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் சிலைகளை விற்பனை செய்வதற்காக உலோகத்தில் உள்ள தங்கத்தின் தூய்மையை பரிசோதிக்க சிலைகளின் சில பகுதிகளை வெட்டி சேதப்படுத்தியதும்,
கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் நபரிடம் சிலைகளை ஒப்படைக்க 5 பேர் காத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து 5 பேரையும் கைது செய்து சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுவாமி சிலைகள், எந்த கோயிலை சேர்ந்தது என்பதை கண்டறிய, விசாரணை அதிகாரியாக வேலூர் சரக ஆய்வாளர் முனியம்மாள் நியமிக்கப்பட்டுள்ளார். சிலை திருட்டு தடுப்பு பிரிவு தனிப்படை போலீஸாரின் விரைவான நடவடிக்கையை டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.