களியக்காவிளை சிறப்பு எஸ்.ஐ வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; கார், பைக் எரிந்து சேதம் - கண்காணிப்பு கேமரா உடைப்பு

கார் எரிந்து சேதம்.
கார் எரிந்து சேதம்.
Updated on
1 min read

களியக்காவிளை சிறப்பு எஸ்.ஐ வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், கார், பைக் எரிந்து சேதமானது. வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராக்களையும் உடைத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை அடுத்துள்ள இடைக்கோட்டை சேர்ந்தவர் செலின்குமார். இவர் களியக்காவிளை காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ-யாக இருந்து வருகிறார். இவர் நேற்று (ஜூலை 02) பணி முடிந்து இரவில் வீடு திரும்பினார். உணவருந்தி விட்டு தூங்கிய நிலையில் இன்று (ஜூலை 03) அதிகாலை 2.30 மணியளவில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த அவரது கார், பைக் ஆகியவை தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதைப்பார்த்த பக்கத்து வீட்டினர் சத்தமிட்டு எஸ்.ஐ செலின்குமாரை அழைத்துள்ளனர். கண்விழித்த செலின்குமார், வெளியே வந்து பார்த்தபோது காரும், பைக்கும் தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் பக்கத்து வீட்டினருடன் சேர்ந்து தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. குழித்துறை தீயணைப்பு நிலையத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து தீயை அணைந்தனர். ஆனாலும் காரும், பைக்கும் எரிந்து சேதமானது.

தகவல் அறிந்த அருமனை போலீஸார் எஸ்.எஸ்.ஐ. செலின்குமாரின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் உடைத்து சேதப்படுத்தப்பட்டிருந்தன. மேலும், வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதில், கார், பைக் எரிந்தது தெரியவந்தது.

சம்பவம் குறித்து உண்மை நிலையை அறிந்து குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. கேமரா உடைக்கப்பட்ட நிலையில், உடைப்பதற்கு முன்பு வரை கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அப்போது, அதிகாலை 2.10 மணியளவில் இரு நபர்கள் செலின்குமாரின் வீட்டுக்குள் வரும் காட்சிகளும், வீட்டு சுற்றுசுவருக்கு வெளியே நின்றுகொண்டு பெட்ரோல் குண்டை வீசுவதும், அது வெடித்து பைக், கார் எரியும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

எஸ்.எஸ்.ஐ. செலின்குமார் இதற்கு முன்பு தக்கலையில் பணியாற்றி வந்தார். யாருக்காவது அவருடன் முன்விரோதம் மற்றும் தகராறு இருந்துள்ளதா? என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே கடந்த மாதம் செலின்குமாரின் வீட்டில் வளர்த்து வந்த நாயை இரவில் யாரோ விஷம் வைத்து கொன்றுள்ளனர். அதன் பின்னரே, அவர் வீட்டில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினார்.

செலின்குமாரை குறிவைத்து தொடர்ச்சியாக வீட்டில் தாக்குதல் நடத்தி வருவதும், இச்செயல்களில் ஒரே தரப்பினர் தான் ஈடுபட்டிருக்கக்கூடும் எனவும் போலீஸார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து, தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in