

பிரபல ரவுடி சிடி மணி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த பிரபல ரவுடி சிடி மணி. இவர், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை பகுதிகளில் சிடி விற்பனை செய்து வந்ததால் சிடி மணி என்று அழைக்கப்பட்டார்.
ஆயுதங்கள் பதுக்கல், தொழில் அதிபர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி பணம் பறித்தல், போலீஸாரை துப்பாக்கியால் சுட்டது என, பல வழக்குகள் இவர் மீது உள்ளன.
இவரை கடந்த 2-ம் தேதி சென்னை முட்டுக்காடு அருகே காவல் துறையினர் கைது செய்தனர். இவர் மீது 8 கொலை வழக்குகள் உள்பட 28 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி சிடி மணி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று (ஜூன் 27) உத்தரவிட்டுள்ளார்.